காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. காவிரி வரும் ஒகேனக்கல் முதல் கடலில் சங்கமிக்கும் பூம்புகார் வரை காவிரி கரையோரங்களில் ஆடிப்பெருக்கு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். கடந்த 2019-2021 ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஆடிப்பெருக்கு விழாவை ஆற்றங்கரைகளில் கொண்டாட காவல்துறையினர் அனுமதி அளிக்கவில்லை. இதனால் வீடுகளில் உள்ள காவிரி குடிநீர் குழாய்க்கும், ஆழ்குழாய் கிணற்றிலும் பூஜை செய்து வழிபட்டனா். இதனால் கடந்த 2 ஆண்டுகளிக்கு முன்பு ஆடிப்பெருக்கு விழா அன்று காவிரி படித்துறைகள் களை இழந்து காணப்பட்டது. இந்தநிலையில் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு விழாவை பொதுமக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். குறிப்பாக திருச்சியில் அம்மா மண்டபம், கருடமண்டபம், கீதாபுரம், ஓடத்துறை, அய்யாளம்மன் படித்துறை உள்ளிட்ட படித்துறைகளில் ஆடிப்பெருக்குவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

 



 

குறிப்பாக அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்கு விழாவை கொண்டாட பக்தர்கள் அதிக அளவில் குவிந்துள்ளனர். மேலும் படித்துறையில் வாழை இலை விரித்து அதில் மஞ்சள் பிள்ளையார் வைத்து, தேங்காய், அரிசி, வெல்லம், பழ வகைகள் உள்பட மங்கல பொருட்களை படையலிட்டு பூஜை செய்து வருகிறார்கள். பின்னர் காவிரி ஆற்றுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றை கழுத்தில் கட்டிக்கொள்வர். மேலும் திருமணமாகாத இளம்பெண்களும் தங்களுக்கு திருமணம் நடக்க வேண்டி கையில் மஞ்சள் கயிறு கட்டிக்கொண்டனர்.

 



 

மேலும் கணவருக்கு நீண்ட ஆயுளும், நீடித்த செல்வமும் வழங்க வேண்டும் என்று சுமங்கலி பெண்கள் அனைவரும் காவிரித்தாயை பிரார்த்தித்து, தங்களது தாலியை பிரித்து புதுத்தாலியை கட்டுவர். இளைய பெண்களுக்கும் கட்டிவிடுவர். தமிழர்கள் பாரம்பரியமாக கொண்டாடும் ஆடிப்பெருக்கு விழா, காவிரியாற்று வெள்ளம் போலவே, காவிரி கரையோர மக்களிடம் மகிழ்ச்சியை கரை புரண்டோட வைத்துள்ளது. இதுபோல், ஆடிப்பெருக்கான இன்று, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறை, குடமுருட்டி அய்யாளம்மன் படித்துறை, ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் படித்துறை உள்ளிட்ட, காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் ஏராளமாக கூடியுள்ளனர். 

 



 

இதைத்தவிர, ஆங்காங்கே உள்ள காவிரி, கொள்ளிடக் கரைகளில் பெண்கள் திரண்டுள்ளனர். கொரானா பரவல் காரணமாக, ஆடிப்பெருக்கு விழாவையொட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக படித்துறைகளில் பொதுமக்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாண்டு தடைக்கு பின்னர் ஆடிப்பெருக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் காவல்துறை சார்பாக பொதுமக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து பாதுக்காப்பு குறித்து அறிவுறுத்தபட்டு வருகிறது.

 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.



 






ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண