தமிழ்நாடு உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத்  தொடர்ந்து விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் உறுப்பு தானம் சிறப்பாக செயல்பட்டு வரும் நிலையில், இதயம் , கல்லீரல் , சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உடலுறுப்புகளை தானம் பெறுவதற்காக 6,811 நபர்கள் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இதில் அதிகபட்சமாக 6 ஆயிரத்து 179 பேர் சிறுநீரகம் வேண்டியும் , 449 பேர் கல்லீரல் வேண்டியும் விண்ணப்பித்துள்ளனர்.


72 பேர் இதயத்திற்காகவும் , 60 பேர் நுரையீரலுக்காகவும் காத்திருக்கின்றனர். 24 பேர் இதயம் , நுரையீரல் இரண்டும் வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கைகள் வேண்டி 26 பேரும் கணையம் வேண்டி ஒருவரும் காத்திருக்கின்றனர். உறுப்பு தானம் பெறும் நடைமுறை 2008- ஆம் ஆண்டு தொடங்கியது. அப்போது முதல் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கணையம் என முக்கிய உறுப்புகள் தானம் பெறப்பட்டு பலர் மரணத்தின் விளிம்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர். கடந்த 15 ஆண்டுகளில் ஆயிரத்து 726 உறுப்பு கொடையாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 327 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. கடந்த இரண்டரை ஆண்டில் மட்டும் 313 கொடையாளர் மூலம் ஆயிரத்து 242 உறுப்புகள் தானமாக பெறப்பட்டு 663 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர்.




இந்நிலையில் திருச்சி மாவட்ட பீஸ்ட் பவுன்சர்ஸ் சார்பில் 4ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சி இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி துவக்க விழாவை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு குத்து விளக்கு ஏற்றி வைத்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இவ்விழாவில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு... நம்முடைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது துணைவியார் இருவரும் தங்களுடைய உடல் உறுப்புகளை தானமாக கொடுப்பதாக கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பதிவு செய்தார். அதன்பின் தான் பலர் தாமாக முன்வந்து உடல் உறுப்புகளை தானமாக வழங்க பதிவு செய்து வருகின்றனர். இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. மேலும் உடல் உறுப்புகளை தானம் செய்பவர்களின் குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பது மற்றும் உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு அரசு மரியாதை உடன் இறுதி சடங்குகள் செய்வது உள்ளிட்ட திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


இந்நிலையில் திருச்சியில் 50க்கும் மேற்பட்டோர்கள் உடல் உறுப்பு தானம் செய்ய முன்வந்தனர். அந்த  இளைஞர்களுக்கு சான்றிதழ்கள் அமைச்சர் நேரு வழங்கி பாராட்டுகள் தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சியில்  சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மூளை நரம்பியல் துறை மருத்துவர் வேனி எழுதிய புத்தகத்தை அமைச்சர் நேருபெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் திருச்சி மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,பீஸ்ட் பவுன்சர்ஸ் ஜோனல், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாமன்ற உறுப்பினர்கள் காஜாமலை விஜி, புஷ்பராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.