திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது: தமிழகத்தில் கால் நூற்றாண்டுக்கு மேலாக சிறையில் வாடி தவிக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியிருக்கிறோம். அதேசமயம் சட்டமன்ற கூட்டத் தொடரில் கோரிக்கையும் முன் வைத்தோம். குறிப்பாக இந்த ஆண்டு அண்ணா பிறந்தநாள் அன்று முஸ்லிம் திரைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களிடம் வலியுறுத்தினோம். இதனைத் தொடர்ந்து சிறையில் வாடி தவிக்கும் 20 முஸ்லிம் சிறைவாசிகளை முதல் கட்டமாக விடுதலை செய்ய தமிழக ஆளுநர் ரவி அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை கடிதத்தை அனுப்பி உள்ளார். ஆனால் ஒரு மாத காலங்கள் கடந்தும் இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் படுத்தி வருகிறார். இத்தகைய செயலை கண்டித்து அக்டோபர் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணி அளவில் சென்னை கிண்டி பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.
மேலும், புதிதாக திறக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தொடரில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஷ் பிதுரி பேசியபோது, பகுஜன் சமாஜ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டானிஸ் அலி அவர்களை கொச்சையான வார்த்தைகளால் இழிவு படுத்தும் விதமாக பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இதே போன்று தான் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் பேசும்போதும் கூச்சல் இட்டு சத்தங்களை எழுப்பினர். இதை பார்த்தும் கண்டு கொள்ளாமல் சபாநாயகர் இருக்கிறார். இதனால் நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது திட்டவட்டமாக தெரிகிறது. ஆகையால் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். நீட் தேர்வானது வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பயிற்சி நிறுவனத்திற்கு சென்று எளிதாக தேர்வில் வெற்றி பெற்று விடுகிறார்கள். ஆனால் ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த மாணவ ,மாணவிகளின் மருத்துவ படிப்பு கனவானது கனவாகவே முடிந்து விடுகிறது. அது மட்டுமில்லாமல் எண்ணற்ற உயிர்களை நீட் தேர்வு காவுவாகியுள்ளது. ஆகையால் உடனடியாக தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “INDIA கூட்டணி கட்சிகள் ஒன்றிணைந்து நடத்திய கூட்டங்களை பார்த்து பாஜக பயந்துவிட்டது. மேலும் வருகின்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்று நினைத்து மக்களை திசை திருப்பும் நோக்கத்தோடு மகளிர் காண இட ஒதுக்கீடை பற்றி அறிவித்து வருகிறார்கள். மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறு வரை செய்யப்பட்டால் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள், 32 தொகுதியாக குறையும், அதே சமயம் வட மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆகையால் மாநிலங்களின் நிலப்பரப்பை வைத்து தொகுதியை மறுவரரை செய்ய வேண்டும், மக்கள் தொகையை வைத்து செய்யக்கூடாது. தமிழகத்தில் தொகுதி மறுவறையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாது.
பாஜக- அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தல் வரை நீடிக்கும். பாஜகவின் அடிமை கட்சியாக அதிமுக உள்ளது. ஆகையால் அதிமுக தனது தோளிலிருந்து பாஜகவை இறக்கி விட தெம்பும், தைரியமும் கிடையாது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஒரு போதும் மக்கள் ஜனநாயகத்திற்கு விரோதமாக உருவாக்கப்படும் திட்டத்திற்கு அனுமதிக்க மாட்டோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் INDIA கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும். மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் திமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மேலும் எங்கள் கூட்டணி வலுபெறும்” என்றார்.