சென்னையில் உள்ள பிரபல தனியார் நிறுவனம் திருச்சி மாவட்டம் முசிறி அருகே மூவனூரில் சோலார் பேனல் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த பணிக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்காக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்தை சென்னை தனியார் நிறுவனம் கடந்த ஆண்டு தொடர்பு கொண்டது. ஐதராபாத் நிறுவனத்தை சேர்ந்த ஷீரிஷாபொலு, இவரது கணவர் பவன்குமார், சோலார் பேனல் விற்பனை பிரதிநிதி செல்வகணேஷ் ஆகியோர் சென்னை மணலியில் உள்ள கிடங்கில் சோலார் பேனல்களை சேமித்து வைத்துள்ளோம். ஒரு சோலார் பேனலின் விலை ரூ.15 ஆயிரத்து 450 என்று தெரிவித்தனர். இதைதொடர்ந்து சென்னை நிறுவனத்தினர் 5,580 சோலார் பேனல்களை வாங்குவதற்காக ஷீரிஷாபொலுவின் வங்கி கணக்குக்கு ரூ.9 கோடியே 68 லட்சத்து 56 ஆயிரத்து 330-ஐ கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் அனுப்பினர். ஆனால் ஐதராபாத் நிறுவனம் கூறியவாறு சோலார் பேனல்களை வழங்கவில்லை. இதுகுறித்து கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் ஐதராபாத்துக்கு சென்று ஷீரிஷாபொலு, பவன்குமார், செல்வகணேஷ் ஆகிய 3 பேரையும் நேற்று  கைது செய்தனர். பின்னர் அவர்களை விசாரணைக்காக திருச்சி அழைத்து வந்தனர்.





 

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக மோசடி வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பல்வேறு கட்டங்களாக காவல்துறை தரப்பில் விழிப்புணர்வும், அறிவுரைகளும் வழங்கினாலும் தொடர்ந்து மக்கள் மோசடிகளில் சிக்கி ஏமாந்து போகிறார்கள் என தெரிவித்தனர். குறிப்பாக நிறுவனத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் தருவதாகவும், பணத்தை இரட்டிப்பாக்க வழிவகை செய்வதாகவும், மிகக் குறைந்த விலையில் தரமான பொருட்களை வாங்கித் தருவதாகவும், இதனால் அதிக அளவில் லாபம் சம்பாதிக்கலாம், என ஆசை வார்த்தைகளை கூறி அப்பாவி பொதுமக்களை தொடர்ந்து ஏமாற்றும் கும்பல் அதிகரித்து வருகிறது. இவற்றை கட்டுப்படுத்த காவல்துறை தரப்பில் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் காவல்துறை எடுக்கும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுமையாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே இது போன்ற மோசடி வழக்குகளில் முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். 

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.








ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண