திருச்சி பொன்மலையில் மத்திய அரசின் நிறுவனமான ரயில்வே பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இங்கு ரயில் பெட்டிகள், ரயில் என்ஜின்கள் மற்றும் புகழ்வாய்ந்த ஊட்டி மலை ரயில் எஞ்சின்கள் பழுது பார்க்கப்பட்டு வருகின்றன. வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து இந்த ரயில்வே பணிமனைக்கு தேவையான உதிரி பாகங்கள் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம். அதேபோல் தொழிற்சாலையில் இருந்து உதிரி பாகங்களை வெளியே கொண்டு செல்லப்படும். இந்த நிலையில் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் தலைமையிலான ரயில்வே போலீசார் கடந்த 4 நாட்களுக்கு முன்பு இரவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளி அருகே மர்மமான முறையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரியை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் மின்மோட்டார் ஒன்று இருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரயில்வே போலீசார், அந்த லாரியில் இருந்த 2 பேரிடம் விசாரித்தபோது தொழிற்சாலையில் இருந்து மின் மோட்டாரை கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த மின் மோட்டாரின் மதிப்பு சுமார் ரூ.50 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது இது சம்பந்தமாக கோபால்(வயது 30), மணிகண்டன்(29) ஆகிய 2 பேரையும் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.




 

மேலும் தற்போது தொழிற்சாலையில் தூய்மை பணி நடந்து வருவதாகவும், அங்கு இவர்கள் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாகவும், இதனால் தினமும் லாரிகளில் தொழிற்சாலைகளில் இருக்கும் தேவையற்ற குப்பை மற்றும் மணலை அள்ளிக் கொண்டு வெளியே கொட்ட வருவதாகவும், அப்படி வந்தபோது மின் மோட்டாரை லாரியில் வைத்து மேலே மணலை கொட்டி கொண்டு வந்ததாகவும், அவர்கள் கூறியுள்ளனர். இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இந்த வழக்கில் மின் மோட்டார் திருட்டு போனது குறித்து அலட்சியமாக இருந்ததாக கூறி ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் கிரண், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், போலீஸ்காரர் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு மிகுந்த ெரயில்வே தொழிற்சாலையில் இருந்து 2 பேர் மின் மோட்டாரை திருடி வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண