திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஒருவாரகாலமகா விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சி அடுத்துள்ள  உப்பிலியபுரம் பகுதிகளில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெப்பக்காற்றுடன் வெயில் சுட்டெரித்தது. மாலை வேளையில் பலத்த இடி, மின்னல் மற்றும் குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்ய ஆரம்பித்தது. கொல்லிமலையின் நீர்ப் பிடிப்பு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்தது. மாலையில் தொடங்கிய மழைப்பொழிவு விடிய, விடிய தொடர்ந்ததால் புளியஞ்சோலை பகுதி வெள்ளக்காடாக மாறியது. நேற்று மாலை முதல் பெய்த மழையால் ரெட்டியாப்பட்டி வேப்பமர வீதி பகுதிகளில் உள்ள குடியிருப்பு வீடுகளை சுற்றி மழை தண்ணீர் தேங்கியது. இதனால் மக்கள் வெளியில் வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கினர். மேலும்  வீட்டிற்குள் மழைநீர் புகுந்ததால் சமையல் பாத்திரங்கள், மளிகைப்பொருட்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. ஆகையால் மாவட்ட நிர்வாகம் வாழ்வாதரத்திற்கு உதவி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சேதமடைந்த விவசாய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர். 




மேலும் புளியஞ்சோலை பகுதிகளில் பெய்த கனமழையால் தங்கநகர், குண்டக்கல் பகுதிகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே குளம்போல் தேங்கியது. குண்டக்கல்லிலிருந்து தங்கநகர் வரும் பாதை முழுவதும் நீரோட்டமாக இருப்பதால் தார்ச்சாலை நீர்வழிச்சாலையாக மாறி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஒக்கரையில் பெய்த கனமழையால் ஒக்கரை, கிருஷ்ணாபுரத்திற்கு இடையேயான ஏரிப்பாசன பகுதிகளில் உள்ள மழை வடிகால்கள் மூழ்கின. மேலும் அந்த பகுதியை மழை நீர் சூழ்ந்ததால் சுமார் 20 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இது சம்பந்தமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் துறையூர் பொதுப்பணித்துறையினர், வருவாய் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். விடிய, விடிய பெய்த மழையால் புளியஞ்சோலை அய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் புளியஞ்சோலை நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கடந்த 40 நாட்களாக பாதுகாப்பு கருதியும், ஆக்கப்பூர்வ பணிகளுக்காகவும் நாமக்கல் மாவட்ட வனத்துறையினர் புளியஞ்சோலை காப்புக் காடு பகுதி, நாட்டாமடு பகுதிகளில் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் வருகைக்கு தடை விதித்துள்ளனர். 




இந்நிலையில் புளியஞ்சோலை. மலைசார்ந்த பகுதிகளில் நாமக்கல் மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம் தலைமையில் துணை வன பாதுகாவலர் அல்லி ராஜ், வனச்சரக அலுவலர் பெருமாள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு  செய்தனர். பின்பு அவர்கள் கூறியது.. கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் புளியஞ்சோலையில் உள்ள அய்யாற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இங்குள்ள நாட்டாமடு பகுதி முழுவதும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மேலும் அப்பகுதியில் கடந்த மார்ச் மாதம் 22-ந்தேதி கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் விபத்தில் சிக்கி இறந்தார். ஆகையால் சுற்றுலா பயணிகளுக்கு தடைவிதிக்கபட்டது. இந்தநிலையில் தற்போது, தொடர் மழை பெய்து வருவதால் புளியஞ்சோலையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கான தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.