“சீமான் ஒருபுறம், விஜய் மற்றொருபுறம்” சட்டமன்ற தேர்தல் கூட்டணி பற்றி பேசிய அமைச்சர் நேரு..!

தமிழ்நாட்டில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மாபெரும் வெற்றி அடைய அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் - அமைச்சர் நேரு பேச்சு

Continues below advertisement

திருச்சி மாவட்டம், லால்குடியில் திமுக மத்திய மாவட்டம் சார்பில் உறுப்பினர் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி,  சட்டமன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பெரியய்யா. சண்முகநாதன். சக்திவேல் பொதுக்குழு உறுப்பினர் விமல், மாவட்ட ஆதிதிராவிடர் துணை அமைப்பாளர் முருகவேல் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Continues below advertisement

இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மேடையில் பேசியது.  

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த அனைத்து தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகம் மகத்தான வெற்றியை பெற்றுள்ளது. குறிப்பாக சட்டமன்ற தேர்தலில் தனி பெரும்பான்மை, அதேபோன்று நாடாளுமன்றத் தேர்தலில் 40க்கும் 40 என்று தொடர் வெற்றியை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்று வருகிறது. இதற்கு முக்கிய காரணம் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்களின் கடுமையான உழைப்பு ஆகும். 

குறிப்பாக லால்குடி தொகுதியில் கடந்த 2006 முதல் 2021 வரை தொடர்ந்து திமுக எம்எல்ஏ சவுந்திரபாண்டியன் வெற்றி பெற்று வருகிறார். இதற்கு முக்கிய காரணம் அவர் ஆற்றிய பணிகளும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவும் என்று சொன்னால் அது மிகை ஆகாது. 

மேலும், லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட பாரிவேந்தர் பச்சமுத்து,‌ என்னை விட 100 மடங்கு வசதி பெற்றவர். ஆனால் அவரை எதிர்த்து போட்டியிட்ட எனது மகன் அருண் நேருவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணம் கட்சியின் நிர்வாகிகள் மட்டுமே . எனது மகன் வெற்றி பெற கடுமையாக உழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த  நன்றி கூறினார். 


திமுக தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் - அமைச்சர் நேரு 

மேலும்,  லால்குடி மற்றும் கல்லக்குடியில் அதிகமாக பொதுக்கூட்டங்கள் நடத்தி திமுக கட்சியை வளர்த்து வருகிறோம். லோக்சபா தேர்தல் கூட்டணி போல், வருகிற சட்டப்பேரவை தேர்தல் கூட்டணி அமையும் சூழல் இல்லை. சீமான் ஒரு புறம், புதிதாக கட்சி ஒருவர் ஆரம்பிக்கிறார் அவர் ஒரு புறம்.  பாமக தொடர்ந்து திமுகவை விமர்சித்து வருகிறது. இப்படி இருக்கும் பொழுது வருகிற சட்டமன்றத் தேர்தலில் நாடாளுமன்றத் தேர்தலில் உள்ள சூழல் சுமூகமாக இருக்காது. தொடர்ந்து தொண்டர்கள், நிர்வாகிகள் கடுமையாக பணியாற்றி அமைச்சர் உதயநிதி அவர்கள் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.

அதிமுக பொறுத்த வரையில், யார் தலைவர் என்றே தெரியவில்லை, அதிமுகவில் குழப்பம் நீடிக்கிறது. நான் திருச்சி மட்டுமல்ல எங்கு நின்றாலும், எனக்கு முதலில் நினைவுக்கு வருவது லால்குடி தொகுதி தான் என்று பேசினார்.

ஆகையால் தமிழ்நாட்டில் வருகின்ற உள்ளாட்சி,  கூட்டுறவு சங்க தேர்தல், சட்டமன்றத் தேர்தல் போன்ற எது வந்தாலும் அதில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்று மாபெரும் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும். 

நாம் அனைவரும் ஒற்றுமையாக இணைந்து மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியில் கிடைத்த திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைக்க வேண்டும். தொடர்ந்து பகுதி ,வட்டம், கிளை, மாணவர் அணி, இளைஞர்கள் அணி ,ஒன்றிணைத்து பல கூட்டங்கள் நடத்தி கட்சியை வலுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கினார். 

Continues below advertisement