பெரம்பலூர் அருகே புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெருவில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு நேற்று அதிகாலை 3 மணியளவில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதியில் வசிப்பவர்கள் இது குறித்து உடனடியாக புதுநடுவலூர் கிராம உதவியாளர் சுந்தர்ராஜனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து, இறந்து கிடந்தவரின் உடலை பார்வையிட்டனர். அப்போது அவரது தலையின் பின்புறத்திலும், முகத்திலும் வெட்டு காயங்கள் இருந்தன. இதனால் அவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. இதற்கிடையே கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் அந்த வாலிபரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்தவர் தூத்துக்குடி மாவட்டம், வேடநத்தத்தை சேர்ந்த பழனியின் மகன் கமலஹாசன் (வயது 35) என்பதும், இவர் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, விஜயகோபாலபுரத்தில் உள்ள எம்.ஆர்.எப். டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த ஊழியராக கடந்த 3½ ஆண்டுகளாக மெக்கானிக் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், கமலஹாசனுக்கு கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சுளா(24) என்ற பெண்ணுடன் திருமணமாகி உள்ளது. இதையடுத்து அவர் தனது மனைவியுடன் சிறுவாச்சூரில் கல் ஒட்டர் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கமலஹாசன் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு 2-வது ஷிப்ட் வேலைக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது அவர் மஞ்சுளாவிடம், இரவு 11.30 மணிக்கு வேலை முடிந்தவுடன், தன்னுடன் வேலை பார்க்கும் புதுச்சேரியை சேர்ந்தவரும், சிறுவாச்சூர்-அயிலூர் ரோட்டில் வசித்து வருபவருமான சிற்றரசனின் மகன் அருண் (31) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வந்து, சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோவில் நுழைவு வாயில் (ஆர்ச்) முன்பு இறங்கி, வீட்டிற்கு நடந்து வந்து விடுவேன் என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இரவில் வெகுநேரமாகியும் கமலஹாசன் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த மஞ்சுளா, இது தொடர்பாக அருணை செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அப்போது அவர், இரவு 11.30 மணிக்கு கமலஹாசனை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிவிட்டு விட்டு சென்றதாக கூறியுள்ளார். பின்னர் அருண் அக்கம், பக்கத்தில் தேடியும் கமலஹாசனை கண்டுபிடிக்க முடியவில்லை என்று வீட்டிற்கு நேரில் வந்து மஞ்சுளாவிடம் கூறிச்சென்றதாக தெரிகிறது.
இந்த நிலையில் மஞ்சுளாவுக்கு கமலஹாசனின் செல்போனில் இருந்து போன் செய்து பேசிய 2 பேர் தங்களது பெயர் மனோஜ்குமார், கார்த்திகேயன் என்று தெரிவித்ததோடு, கமலஹாசன் மோட்டார் சைக்கிளில் வந்து தங்கள் மீது மோதிவிட்டதாகவும், அதனால் தாங்கள் மருத்துவமனையில் இருப்பதாகவும், எனவே தங்களுக்கு பணம் தர வேண்டும் என்று கேட்டதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்தே புதுநடுவலூர் ஆதிதிராவிடர் தெரு மாரியம்மன் கோவில் முன்பு கமலஹாசன் உடலில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தது விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின்பேரில் புதுநடுவலூரை சேர்ந்த மனோஜ்குமார், கார்த்திகேயன் ஆகிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.