புதுக்கோட்டை மாவட்டம்  பெரியார் நகரை சேர்ந்தவர் மனோன்மணி (வயது 67). இவரது மகள் வெண்ணிலாவுக்கு கடந்த மார்ச் மாதம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றிருந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 5-ந் தேதி இரவு அவரது வீட்டில் மர்ம ஆசாமிகள் புகுந்து 121 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இது தொடர்பாக புதுக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் உத்தரவின் பேரில் டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ் மேற்பார்வையில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தராஜன், மாரிமுத்து, காமராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. திருமண வீட்டில் நகைகள் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. வெண்ணிலாவின் சகோதரர் கனடாவில் டாக்டராக பணியாற்றி வருகிற நிலையில் அவரும் திருமணத்திற்காக வந்திருந்தார்.

 



 

இந்த நிலையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுரை அகதிகள் முகாமை சேர்ந்த சிவராஜன் (46), மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த தங்கபாண்டி (34), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த சதீஷ் என்கிற ஸ்டீபன் (38) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 61 பவுன் நகைகளை தங்க கட்டிகளாக மீட்டனர். கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியது..  சிவராஜன், சதீஷ் ஆகிய இருவரும் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் வீடு எடுத்து தங்கி ஆங்காங்கே கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இவர்கள் இரண்டு பேருக்கும் தங்கபாண்டி நண்பர் ஆவார். இவர்களுக்குள் பழக்கம் சிறையில் இருக்கும் போது ஏற்பட்டிருக்கிறது. 3 பேர் மீதும் பல்வேறு இடங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் கைதான 3 பேரும் சம்பவத்தன்று திருமணத்திற்காக குடும்பத்தினர் வீட்டை பூட்டி விட்டு சென்றதை நோட்டமிட்டு நகைகளை கொள்ளையடித்து இருக்கின்றனர்.

 



 

இதனை தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளில் இவர்கள் பயன்படுத்திய கார் மூலம் விசாரணையில் துப்பு துலங்கியது. மேலும் செல்போன் சிக்னல் டவரில் பதிவான எண்களை வைத்தும் விசாரித்ததிலும் 3 பேர் பற்றி தெரியவந்தது. கைதான 3 பேரும் நகைகளை கொள்ளையடித்து உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் கொள்ளையடித்த நகைகளில் 10 பவுன் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். அந்த நகைகளும் மீட்கப்படும். கைதான 3 பேரையும் சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.