பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கொல்லாபுரத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். இதனை தொடர்ந்து மேடையில் பேசிய அவர் கூறியது.. பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர் மாவட்டத்தை கடந்த 2007-ம் ஆண்டு தலைவர் கலைஞர் உருவாக்கினார். தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிக்கு என இந்த அரசு ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியை உருவாக்கி இருக்கிறோம். 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் தொன்மையான பாரம்பரியம் மற்றும் தமிழ் மண்ணின் விழுமியங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். நேற்றைய தினம் கங்கைகொண்டசோழபுரத்தில் தெற்காசிய நாடுகளை வென்று சீனா போன்ற நாடுகளுடன் வாணிபம் செய்த முதலாம் ராஜேந்திரன் சோழனின் வரலாற்று தடயங்களை அறிந்து பெருமை அடைந்தேன். ஆகவே கங்கைகொண்ட சோழபுரத்தில் புதிதாக ஒரு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்பதை நான் இந்த விழாவில் அறிவிக்கிறேன். இன்றைய தினம் அரியலூர் மாவட்டத்தில் ரூ.30 கோடியே 26 லட்சம் மதிப்பிலான 51 முடிவுற்ற பணிகளை திறந்துவைத்தும், ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பிலான 3 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசு துறைகள் சார்பில் 26,070 பயனாளிகளுக்கு ரூ.52 கோடியில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கியுள்ளேன்.




மேலும் பெரம்பலூர் மாவட்டத்திலும் ரூ.221.80 கோடி மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்துவைத்தும், ரூ.31.38 கோடி செலவில் 54 புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.03 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. பத்து ஆண்டுகள் பாழ்படுத்தப்பட்ட தமிழகத்தை உடனே மீட்பது என்பது எனக்கு மலைப்பாக இருந்தது. ஆனால் இன்று பல்வேறு வகைகளில் மீட்டு கொண்டு வந்திருக்கிறோம். தொழில் நிறுவனங்கள் தமிழகத்திற்கு போட்டி போட்டுக்கொண்டு வருகின்றன. ஏற்றுமதியில் தமிழகம் முன்னணியில் இருக்கிறது. அனைத்து துறைகளிலும் வளர்ச்சி ஏற்பட்டு இருக்கிறது. வேளாண் உற்பத்தி எல்லையும், பாசன பரப்பும் அதிகரித்து இருக்கிறது. பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் விருதுகளை பெற்றிருக்கிறோம். அரசு பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லா பயண திட்டத்தினால் பெண்களுக்கு நிரந்தர வருமானம், மாநில திட்டக்குழு துணைத்தலைவரின் ஆய்வறிக்கையில் கட்டணமில்லா பேருந்து பயணத்தால் பெண்கள் மாதந்தோறும் ரூ.900 சேமிக்க முடிகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேமிப்பு தொகையை குடும்ப வளர்ச்சிக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது. கடந்த 15 மாத ஆட்சி காலத்தில் ஒன்றரை லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு கொடுத்து இருக்கிறோம். கொரோனாவை வென்று காட்டி இருக்கிறோம். மழை, வெள்ள பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாத்து இருக்கிறோம்.




இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பெற்றுள்ளது. பரப்பளவில் பெரிய மாநிலங்கள் கூட நமக்கு கீழே இருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய மாவட்டங்களே தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். ஒரு முதல்வர் எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு சாட்சியாக கடந்த ஆட்சி இருந்தது. அதிகாரம் இருக்கும்போது தனது கையை கட்டிக்கொண்டு இப்போது புகார் கொடுக்கிறார்கள், பேட்டி கொடுக்கிறார்கள், விமர்சனம் செய்கிறார்கள். ஆனால் இதை மக்கள் பார்த்து உங்கள் யோக்கியதை தான் எங்களுக்கு தெரியுமே என்று கைகொட்டி சிரிக்கிறார்கள். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள். ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள். ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம். "புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ" என்று சொல்வார்களே, அதுபோல சிலர் "ஆபத்து ஆபத்து" என்று அலறிக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிச் சொல்லும் சிலருக்கு, 'இருக்கும் பதவி நிலைக்குமா' என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்.


மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு பாதுக்காப்பான  ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள். விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும். தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை. தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடைய செய்வதுதான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன் என தெரிவித்தார்.