திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டமாக `எங்கள் முதல்வர் எங்கள் பெருமை' என்ற தலைப்பில் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி திருச்சி புனித ஜோசப் கல்லூரி வளாகத்தில் கடந்த 23 ஆம் தேதி தொடங்கி வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க விழா கடந்த 23 ஆம் தேதி காலை நடைபெற்றது. விழாவுக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்கினார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக நடிகர் பிரபு கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்து, புகைப்படங்களை பார்வையிட்டார். குறிப்பாக சுமார் 12 ஆயிரம் சதுரஅடி அரங்கத்தில் அமைக்கப்பட்டு இருந்த இந்த கண்காட்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இளம் வயது முதல் தற்போது வரை பல்வேறு வகையான போராட்டங்கள் மற்றும் மாநாடுகளில் பங்கேற்ற புகைப்படங்கள், முக்கிய திட்டங்களை தொடங்கி வைத்த அரசு நிகழ்ச்சிகள், தேசிய தலைவர்களுடனான சந்திப்பு, தி.மு.க. அரசின் சாதனைகள் உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது.
மேலும் இந்தக் கண்காட்சியை திரைப் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று நடிகர் விமல் புகைப்படக் கண்காட்சியைப் பார்வையிட்டார். இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திருச்சியில் இந்த கண்காட்சி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு முக்கியக் காரணம் அமைச்சர் நேரு. மிகப் பிரம்மாண்டமாக செய்துள்ளார். இந்த புகைப்படக் கண்காட்சியில் முதல்வர் குறித்து பார்க்காத புகைப்படம் எல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல்வர் இந்த அளவிற்கு வளர்ந்துள்ளார் என்றால் அவரின் உழைப்பு தான் காரணம். அவரது உழைப்பு மக்களுக்கு தெரியும் வகையில் சென்றடைந்துள்ளது வரவேற்கத்தக்கது. கலைஞர், ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என சொல்லுவாராம். அந்த சொல்லுக்கு ஏற்றார்போல் முதல்வரும் உழைப்பு உழைப்பு என்று தான் இருந்துள்ளார். தமிழகத்தில் அவரது கால் படாத இடமே இல்லை. அனைத்து இடத்திற்கும் சென்று மக்களை சந்தித்துள்ளார். அந்த அன்பு தான் அவரை முதலமைச்சராக ஆக்கியுள்ளது.
மேலும் இந்த கண்காட்சியில் புதிய புகைப்படங்களை பார்த்தோம். அதில் கலைஞருடன் அவர் ஒரு புகைப்படம் எடுத்திருப்பார். அதைப் பார்த்தேன். அந்த புகைப்படத்தில் முதலமைச்சர் கலைஞரை அப்பா என்று சொல்வதா தலைவா என சொல்வதா எனும் ஏக்கம் முதல்வர் முகத்தில் தெரிந்தது. அதன் பக்கத்தில் ஒரு கடிதம் இருந்தது. அதில் அப்பா என்று உங்களை ஒரு முறை அழைத்துக்கொள்ளவா தலைவா? என்று எழுதி இருந்தது. மனதை உணர்ச்சிவசமான நிலைக்கு ஆக்கியது என்றார்.