திருச்சி மாவட்டம், மணப்பாறை ராஜீவ் நகர் 4-வது தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). இவர் தனது வீட்டின் கீழ் பகுதியில் கார்மெண்ட் நடத்தி வருகிறார். மேலும் அவர் மாடி வீட்டில் குடும்பத்துடன் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது, மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். மேலும் அதே பகுதியில் 5-வது கிராசில் வசிப்பவர் சரவணன் (45). இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். மேலும் அவர் வீட்டிலும் பர்னிச்சர் பொருட்களை வைத்துள்ளார். இந்த நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த ரூ.6 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதனை தொடர்ந்து இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் திருமாவளவன் (48). இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் சொந்தவேலையாக திருச்சிக்கு சென்று விட்டு நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவும் திறந்து கிடந்தது. அதில் இருந்த வெள்ளி குத்து விளக்கு உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டு இருந்தது.
மேலும் மணப்பாறை ராஜீவ் நகர் 6-வது தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (36), 5-வது தெருவை சேர்ந்த முத்துலெட்சுமி (60), அருண் (24) ஆகிய 3 பேரின் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக வந்த புகாரின் பேரில் மணப்பாறை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் முக்கிய தடயங்களை சேகரித்தனர். மேலும் அப்பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவு காட்சிகளை ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். குடியிருப்பு நிறைந்த இப்பகுதியில் ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டும் மற்றும் கொள்ளை முயற்சியும் நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இதுபோன்று தொடர் சம்பங்கள் நடைபெற்று வருகிறது. ஆகையால் காவல்துறையினர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/ abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்