திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் காந்தி நகர் 7வது கிராஸ் பகுதியை சேர்ந்த ராஜமாணிக்கம் மகன் சதீஷ்குமார் (32) இவருக்கு திருமணமாகி லோகேஸ்வரி என்ற மனைவியும் சஞ்சனா (3) என்ற பெண் குழந்தையும் உள்ளது சதீஷ்குமார் சொந்தமாக லாரி வைத்து வாடகைக்கு ஓட்டி வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வடக்கு ஈச்சம்பட்டி பகுதியில் உள்ள வறட்டு ஏரியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சதீஷ்குமாரின் உடல் மிதப்பதாக மண்ணச்சநல்லூர் காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கொலை செய்யப்பட்ட சதீஷ்குமார் அவரது நண்பர்கள் சிலருடன் தினமும் மது அருந்துவதை வாடிக்கையாக வைத்திருந்தார் என்பதும் சம்பவத்தன்று அவரது நண்பர்கள் உடன் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஜீயபுரம் டிஎஸ்பி செந்தில்குமார் மன்னச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார் மற்றும் காவல்துறையினர்,  சதீஷ்குமாரின் நண்பர்களே தேடிய போது அவர்கள் தலைமறைவாகி இருந்தனர்.




இந்நிலையில் திருவெள்ளறை பகுதியில் நேற்று மறைந்திருந்த சதீஷ்குமாரின் நண்பர்கள் மண்ணச்சநல்லூர் கல்பாளையம் ரோடு பகுதி புல்லட் ராஜா என்கிற ராஜா (41), காந்தி நகர் பகுதி கணேசன் மகன் ராஜா (22) , தெற்க்கு ஈச்சம்பட்டி சேக் அப்துல்லா (45), கல்பாளையம் சுரேஷ் என்கிற பாண்டி (29), வடக்கு ஈச்சம்பட்டி அரவிந்தசாமி (22), ஆகிய 5 பேரையும் மடக்கிப்பிடித்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல் சதீஷ்குமாரின் சொந்தவூர் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள கன்னியாகுடி. அங்கு அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான நிலங்களை கடந்த ஆண்டு அவரது தாய் அம்சவள்ளி ரூபாய் ஒரு கோடியே 17 லட்சத்து விற்றுள்ளார் விற்ற பணத்தில் 6 லட்சம் ரூபாய் கடனை அடைத்து உள்ளார். மீதமிருந்த பணத்தை தலா 37 லட்சமாக பிரித்து சதீஷ்குமார் ஒரு பங்கும், அவரது அண்ணன் அமிர்தராஜ் ஒரு பங்கும், தாய் அம்சவள்ளி ஒரு பங்கும் வைத்துக்கொண்டனர் இதில் சதீஷ்குமார் தனது பங்கு பணத்தை குறித்தும் ஊதாரித்தனமாக செலவு வைத்துவிட்டு மீண்டும் தாய் அம்சவல்லி இடம் சென்று பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளார்.




இதனால் மனமுடைந்த  தாய் அம்சவள்ளி சதீஷ்குமாரின் நண்பர்களை அழைத்து இவன் திருந்த மாட்டான் இவனை எங்கேயாவது கூட்டி சென்று கொன்று விடுங்கள் உங்களுக்கு 5 லட்சம் பணம் தருகிறேன் என்று கூறியுள்ளார். அதன் அடிப்படையில் சதீஷ்குமார் நண்பர்கள் 5 பேரும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை மது அருந்தலாம் என்று ஈச்சம்பட்டி வறட்டு ஏரி பகுதிக்கு சதீஷ்குமாரை அழைத்து சென்றனர். அங்கு மது அருந்திவிட்டு போதையில் இருந்த சதீஷ்குமாரை கை,கால்களை இரும்பு கம்பியால் கட்டி போட்டு 5 பேரும் சேர்ந்து அடித்து கொலை செய்து விட்டு உடலை ஏரியில் வீசி விட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் விசாரணையில் தாயே தன் மகனை கொலை செய்ய மகனின் நண்பர்களை ஏவியது தெரியவந்தது.  இதையடுத்து அம்சவள்ளி (61), சதீஷ்குமாரின் நண்பர்கள் புல்லட் ராஜா, ஷேக் அப்துல்லா ,ராஜா, சுரேஷ், அரவிந்தசாமி ஆகிய 6 பேரையும் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இந்த கொலை வழக்கில் திருச்சி மாவட்டம் மண்ணச்சநலூர் தொகுதி அதிமுக முன்னால்  எம்எல்ஏ பரமேஸ்வரி தம்பி புல்லட் ராஜா லாரி உரிமையாளரைக் கொலை செய்துள்ளது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது என்பது குறிப்பிடதக்கது.