திருச்சி மாவட்டத்தில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் ஆறுகண் பாலம் (தற்போது தொட்டி பாலம்) அருகில் குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னர்களின் குலதெய்வமாக வணங்கப்பட்டு தற்போது திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கி வருகிறது இக்கோயில்.  பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் குட்டி குடித்தல் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதில் திருச்சி மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொள்வது வழக்கம்.

 

இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் 27ஆம்  தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 7ஆம் தேதி இரவு மறுகாப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 8ஆம் தேதி இரவு காளியாவட்டம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அப்போது பக்தர்கள் அம்மனை கோயிலில் இருந்து மேளதாளம் முழங்க புத்தூர் மந்தைக்கு அழைத்து வந்தனர். நேற்று முன்தினம் சுத்த பூஜை நடந்தது. அம்மன் ஓலைப்பிடாரி அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி வீதிகளில் வலம் வந்தார். மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டிகுடித்தல் நேற்று நடந்தது. இதனையொட்டி புத்தூர் மந்தையில் குழுமாயி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

 



 

மேலும்  அம்மனுக்கு தேங்காய், பழம் படைத்து பக்தர்கள் வழிபட்டனர். ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை குடித்த மருளாளி அதனை தொடர்ந்து கோயில் மருளாளியை பக்தர்கள் மேளதாளம் முழங்க அழைத்து வந்தனர். பின்னர் கொம்பு உள்ளிட்ட வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. அப்போது மருளாளிக்கு அருள் வந்ததும் பக்தர்கள் அவரை தங்களது தோள்களின் மீது வைத்து ஊர்வலமாக மந்தைக்கு தூக்கி வந்தனர். அப்போது அம்மனுக்கு நேர்த்தி கடனாகவும், வேண்டுதலுக்காகவும் கொண்டு வந்த ஆட்டுக்குட்டிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. பின்னர் ஒவ்வொரு ஆட்டுக்குட்டியின் ரத்தத்தையும் மருளாளி உறிஞ்சி குடித்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். முன்னதாக அரசு சார்பில் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஆட்டுக்குட்டியின் ரத்தத்தை மருளாளி முதலில் குடித்தார். அதனை தொடர்ந்து பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய ஆட்டுக்குட்டிகள் பலியிடப்பட்டன. விழாக்கோலம் பூண்டது. இந்த குட்டிகுடித்தல் நிகழ்ச்சியையொட்டி ஏராளமான பக்தர்கள் மந்தையில் குவிந்திருந்தனர். இதனால், புத்தூர் மற்றும் உறையூர் பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது.

 



 

திருவிழாவையொட்டி பல்வேறு அமைப்பினர் கோயில் விழாவுக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். சாலையோரங்களில் தற்காலிக கடைகள் தோன்றியதால் புத்தூர்-உறையூர் சாலையில் போக்குவரத்திற்கு பகலில் தடை செய்யப்பட்டது.  நடந்து சென்றவர்கள் மட்டுமே காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டனர். மோட்டார் சைக்கிள், கார்களில் உறையூரில் இருந்து புத்தூர் நோக்கி வந்தவர்கள் தில்லைநகர் வழியாக மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டனர். ஆண்டு தோறும் இந்த நிகழ்வு வெகு சிறப்பாக கொண்டாடபடுவது வழக்கம், அதேபோல் இந்தாண்டும் வெகு சிறப்பாக கொண்டாடபட்டது. குறிப்பாக குட்டி குடித்தல் திருவிழாவில் ஆண்டுதோறும் முதலில் தமிழ்நாடு அரசு இந்து அறநிலைதுறை சார்பாக முதலில் ஆட்டுக்குட்டி பலியிடபடும், இதனை தொடர்ந்து தான் மக்களின் நேத்திக்கடன் நிறைவேற்றபடும் என்பது குறிப்பிடதக்கது.