திருச்சி மாநகராட்சியில் நீண்ட இழுபறிக்கு பின் கடைசி நாளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு  5 வார்டுகள் ஒதுக்கப்பட்டு வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 3 வார்டுகளும் மட்டுமே ஒதுக்குவதாக முதலில் கூறப்பட்டது.காங்கிரஸ் கட்சி அதனை ஏற்க மறுத்து கூடுதல் வார்டுகள் கேட்டு வந்தனர். மேலும் கூடுதலாக 1 வார்டு  என்று பேச்சுவார்த்தை முடிக்கப்பட்டது. ஆனால்  காங்கிரஸ் தலைவர்கள் தரப்பில் அதை ஏற்றுக் கொண்டாலும், சில நிர்வாகிகளும், தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் 4-வார்டு என்ற ஒதுக்கீட்டை  ஏற்றுக்கொள்ள  முடியாது என்றனர். தொடர்ந்து விமர்சனங்கள் பேட்டி போராட்டம் என்று தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.  திருச்சி மாவட்ட காங்கிரஸ் அலுவலகமான அருணாச்சலம் மன்றத்துக்கு தொண்டர்கள் பூட்டு போடும் அளவிற்கு நிலைமை முற்றியது ஆனால் கடைசி வரை திமுக அசரவில்லை. 




மேலும் நீண்ட இழுபறிக்குப் பின் வேட்புமனுத் தாக்கல் கடைசி நாளான நேற்று ஒரு வழியாக காங்கிரசுக்கு 5-வார்டுகள் என ஒதுக்கீடு செய்யப்பட்டது காங்கிரசும் அதற்கு ஒப்புக் கொண்டது. இதனால் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்படாமல் வேட்பாளர்களுக்கு மட்டும் வழக்கம்போல் கடைசி நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு அவசரம் அவசரமாக வேட்புமனு  தயார் செய்து கடைசி நாளான நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.


அதன்படி திருச்சி மாநகராட்சி 2  வது வார்டில் காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர் ஜவஹர், 41 வார்டில்  தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜ், 31 வார்டில் முன்னாள் மேயர் சுஜாதா, 39 வார்டில் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ், 24 வார்டில் ஷோபியா, ஆகியோர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது. தமிழகத்தில் காங்கிரஸ் ஒரு முக்கியமான கட்சியாகும். திருச்சியை பொறுத்தவரை கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அதிகமாக தான் மேயராக இருந்துள்ளனர். மக்களின் பெரும் ஆதரவு எங்களுக்கு உள்ளது, ஆகையால் தான் இந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகள் கேட்டு இருந்தோம், ஆனால் திமுக தரப்பில் தர முடியாது என்று கரராக தெரிவித்தனர்.  




இதனை தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் அதிர்ப்தியில் உள்ளனர். இந்நிலையில் என்னதான் அழுது புரண்டாலும் கடைசியில் 5-வார்டு தான் கிடைத்தது. அதிலும் நேற்று முன்தினம் இரவு வேட்பாளர்களை முடிவு செய்து ,நேற்று காலை எம்.பி. திருநாவுக்கரசர் வேட்பாளர்களிடம் தொலைபேசி மூலமாக உறுதி செய்தார். இன்று  மனுதாக்கல் செய்து இருக்கின்றனர் .வழக்கம் போல் இந்த தேர்தலிலும் கடைசி நேரத்தில் தகவல் சொல்லி வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கின்றனர்.  இது எங்களுக்கு வழக்கமான டென்ஷன்தான் கட்சிக்காக உழைத்த பலருக்கு வாய்ப்பு கிடைக்காது அவர்களுக்கு மட்டும் இல்லை எங்களுக்கும் தான். என்னதான் கட்சிக்குள் சலசலப்பு இருந்தாலும் அனைத்து இடங்களிலும் அனைத்து வேட்பாளர்களும் வேலை செய்ய தயாராகி விட்டோம் என்றனர்.