தமிழகத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் 8 வது நாளாக தனித்தனியே மூத்த அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.
மேலும் அதிமுகவில் ஒற்றை தலைமைக்கு ஓ.பன்னீர்செல்வம் தான் வர வேண்டும் என்று ஓபன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் ,எடப்பாடி பழனிச்சாமி தான் வர வேண்டும் என்று அவரது ஆதரவாளர்களும் தங்களது ஆதரவினை வெளிப்படுத்தி வருகின்றனர். போஸ்டர் யுத்தம் வெடித்த நிலையில் நேருக்கு நேராக வார்த்தை யுத்தங்களும் வெடித்துள்ளது. இதனை தொடர்ந்து ஒற்றைத் தலைமை கோரிக்கையை ஓபிஎஸ் முற்றிலுமாக நிராகரித்து விட்டார்.
இரட்டை தலைமைதான் வேண்டும் என்பது ஓபிஎஸ் ஆதரவாளர்களின் நிலைப்பாடு. அதிமுக கட்சியை பிளவுபடுத்த எடப்பாடி அணியினர் சதி செய்வதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டி வருகிறார்கள். மேலும் அசாதாரணமான சூழல் நிலவுவதால் அதிமுக பொதுக்குழுவை தள்ளி வைக்கலாம் என ஓ.பன்னீர் செல்வம் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் கடிதத்தை பார்க்கவேயில்லை என்று கூறும் இபிஎஸ் தரப்பினரோ திட்டமிட்டபடி அதிமுக பொதுக்குழு கூடும் என்று தெரிவித்துள்ளதோடு பொதுக்குழு எடுக்கும் முடிவை எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் ஒத்துக்கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மாறி மாறி ஆலோசனைகள் நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் ஒருவரை ஒருவர் தலைமை ஏற்க வாருங்கள் என கூறி சுவரொட்டி ஒட்டி வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி ரயில் நிலையம் அருகே ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் அம்மா அவர்களால் அடையாளம் காட்டப்பட்ட கழகத்தின் ஒற்றை தலைமையே, கழகத்தை வழிநடத்த வாருங்கள் என ஒட்டப்பட்டுள்ளது. இதற்கு போட்டியாக அவர்கள் ஒட்டிய சுவரொட்டியின் மிக அருகில் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஒட்டிய சுவரொட்டியில் 4 வருடம் சிறப்பான ஆட்சியை கொடுத்து சாமானிய மக்களிடம் எளிமையான முதல்-அமைச்சர் என பெயரெடுத்து, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அன்போடு அரவணைத்து கட்சியை கட்டுப்பாட்டோடு வழிநடத்தும் எடப்பாடியார் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனவும் அச்சிடப்பட்டிருந்தது. இந்த சுவரொட்டிகளால் திருச்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்