திருச்சியை அடுத்த வயலூரில் பிரசித்திபெற்ற பழமையான முருகன் கோயில் உள்ளது. தைப்பூசத்தையொட்டி நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 12 மணியளவில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் மதியம் 1 மணி அளவில் கோயிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை சமேதராக வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி வெள்ளிமயில் வாகனத்தில் அதவத்தூர் உய்யகொண்டான் ஆற்றங்கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது, அதன்பின்னர் அங்குள்ள மண்டபத்தில் தங்கி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இரவு 8.30 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது. அதன் பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வழியாக சோமரசம்பேட்டை அருகே உள்ள வரகன்திடலுக்கு முத்துக்குமாரசுவாமி சென்றார். அங்கு மண்டகபடியை ஏற்றுக்கொண்டு இரவு 11 மணிக்கு கீழவயலூர் தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.




இதனை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு வடகாபுத்தூர் வந்தடையும் முத்துக்குமாரசுவாமி அங்கு இரவு தங்கி அங்கிருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணியளவில் புறப்பட்டு வழிநெடுக்கிலும் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை 10.30 மணியளவில் சோமரசம்பேட்டை வந்தடைந்த முத்துக்குமாரசாமி அங்கு சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன், உய்யகொண்டான் திருமலை உஜ்ஜிவநாதர், அல்லித்துறை பார்வதி ஈஸ்வரர், சோழங்கநல்லூர் காசிவிசுவநாதர் ஆகிய தெய்வங்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் பின்னர் சோமரசம்பேட்டை நான்கு வீதிகளிலும் வலம் வந்து அங்குள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளினார். இதில் அனைத்து சுவாமிகளும் இரவு 7 மணி வரை அங்கேயே தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். பின்னர் அனைத்து சாமிகளும் புறப்படும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. சோமரசம்பேட்டையில் இருந்து புறப்படும் முத்துக்குமாரசுவாமி அல்லித்துறை மற்றும் அதவத்தூரில் முக்கிய வீதிகளில் வலம் வந்து இரவு அதவத்தூரில் தங்குகிறார். மறுநாள் காலை அங்கிருந்து புறப்பட்டு வயலூர் வந்தடைகிறார். தைப்பூசத்தை முன்னிட்டு முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோயில் மற்றும் வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோயில், முசிறி பரிசல் துறை ரோட்டில் பால தண்டாயுதபாணி, தொட்டியம் பஜனை மடத்தில் அமைந்துள்ள பாலமுருகன் கோயில்களில் தைப்பூச விழா கொண்டாடப்பட்டது.திருச்சி சுப்பிரமணியநகர் முருகன் கோயிலில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற் றது. வள்ளி-தெய்வானையுடன் முருகன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண