திருச்சி இந்திராகாந்தி கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக தெலுங்கானா கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேசியது.. ”புதுச்சேரியில் நல்ல பல திட்டங்களை அறிவித்து வருகிறோம். குறிப்பாக பெண்களுக்கு வேலை நேரத்தில் 2 மணி நேர வேலை சலுகை, பெண்களுக்கு மாதம் ரூ.1,000 அறிவிக்கப்படாமலேயே வழங்கி இருக்கிறோம். புதுச்சேரி ஜிப்மரில் நிர்வாக ரீதியான அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து வருகிறோம். ஆனால் சில கட்சிகள் வேண்டுமென்றே ஜிப்மரை கண்டித்து போராட்டம் நடத்தி உள்ளார்கள்.
கவர்னர் பதவி தேவையில்லை என கூறுபவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் போது ராஜ்பவன் படிக்கட்டுகளையே மிதித்திருக்க கூடாது. எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடும் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு நிலைப்பாடும் எடுப்பவர்கள் முதலில் நிலையான முடிவுக்கு வரட்டும். கவர்னர்களுக்கும் கருத்துரிமை இருக்கிறது. அவர்கள் கருத்துக்களை கூறுவதை யாரும் தடுக்க முடியாது. தேவைப்படும் நேரத்தில் நான் கூட அரசியல் நன்றாகவே பேசுவேன். கவர்னர்கள் மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் பாலமாக மட்டுமல்லாமல் பலமாகவும் இருக்கிறார்கள். கவர்னர்களை கவர்னர்களாக நடத்த வேண்டும்.
கவர்னர்கள் ஒரு கருத்து கூறினால் எதிர் கருத்து கூறலாமே தவிர கடுமையாக விமர்சிக்க கூடாது. கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்க இருக்கிறேன். தீவிரவாதம் எந்த இடத்தில் இருந்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். கருத்து சுதந்திரம் எனக் கூறுபவர்கள் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என கூறுவது ஏன்? திரும்பத் திரும்ப அறிவிப்புகள் கொடுக்கும் அரசையும் பார்த்திருக்கிறோம். ஆனால் தி.மு.க. அரசின் இரண்டு ஆண்டு கால ஆட்சியில் அறிவிப்புகள் கொடுத்து அதை திரும்பப் பெரும் அரசாக தான் உள்ளது” என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி நிறுவனர் வித்யா சேவா ரத்னம் கே. சந்தானத்தின் உருவ சிலை திறப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. தெலுங்கானா கவர்னரும் புதுச்சேரி துணை நிலை கவர்னருமான தமிழிசை செளந்தரராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கே.சந்தானத்தின் உருவச் சிலையைத் திறந்து வைத்து, அவரது உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினார். கல்லூரியின் செயலர் மீனா, தலைவர் தோட்டா பி.வி.ராமானுஜம் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி தலைமை செயல் அதிகாரி கு.சந்திரசேகரன், இயக்குநர் எஸ்.அபர்ணா ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கவர்னர் தமிழிசை செளந்தரராஜன் பேசும்போது, ”நமக்கு கொடுக்கப்பட்ட வேலையை நாம் சிறப்பாக செய்தால் அங்கீகாரம் தானாக கிடைக்கும். சின்ன செயல்களாக இருந்தாலும் அதைக் கவனிப்புடன் செய்ய வேண்டும்.
மேலும் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் திட்டமிட்டு வாழ வேண்டும். யோகா செய்வதால் உடல் மற்றும் மனம் ஆரோக்கியம் பெறும். ஆகவே மாணவிகளாகிய நீங்கள் தினமும் யோகா செய்ய கற்றுக்கொள்ளுங்கள். வாழ்க்கையில் சிரிப்பு என்பது மிகவும் அவசியம். அதே போல விமர்சனங்களைத் தூக்கி எறிய வேண்டும். அப்போது தான் சாதனையாளராக மாற முடியும். முடியாததை முடித்துக் காண்பிப்பவர்கள் தான்சாதனையாளர்களாக ஆக முடியும்” என்றார். முடிவில் கல்லூரி முன்னாள் முதல்வர் வித்யாலெட்சுமி நன்றி கூறினார். இதில், கல்லூரி முதல்வர் கெஜலட்சுமி மற்றும் துணை முதல்வர்கள், பேராசிரியர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், முக்கிய பிரமுகர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.