தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வான நீட் என்பது இந்தியாவில் உள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளங்கலை மருத்துவ படிப்புகள் மற்றும் பிற மருத்துவ படிப்புகளில் சேர்வதற்காக தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் அகில இந்திய நுழைவுத்தேர்வாகும். நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என 680 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 1 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன. தமிழ்நாட்டில் 72 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன. இதில் சுமார் 11 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளது. மேலும் இந்தாண்டு நீட் தேர்வுக்கு கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி முதல் கடந்த மாதம் 6-ந் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்காக நாடு முழுவதும் இருந்து 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்ைககளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டை காட்டிலும் 12 சதவீதம் அதிகமாகும். இந்தாண்டில் 2 லட்சத்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதிகமாக விண்ணப்பித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்தாண்டு நீட் தேர்வுக்கு சுமார் 1½ லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருக்கிறார்கள். இதில் அரசு பள்ளி மாணவ,மாணவிகள் மட்டும் 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்து இருப்பதாகவும், இது கடந்த ஆண்டை காட்டிலும் குறைவு என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுத 17 ஆயிரத்து 972 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர். இதில் 12 ஆயிரத்து 840 பேர் தேர்வை எதிர்கொண்டனர்.




குறிப்பாக இந்தாண்டு மருத்துவக்கல்லூரிகளில் சேருவதற்கு அதிகமானோர் விண்ணப்பித்துள்ளதால் மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. தேர்வில் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகமாக பெற்றால் தான் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கும். ஆனால் நீட் தேர்வு, மத்திய இடைநிலை கல்வி வாரியத்துடன் (சி.பி.எஸ்.இ.) இணைந்த பள்ளிகளில் படித்தவர்களுக்கு சாதகமாக உள்ளது என்று தொடர் குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. ஏனெனில் நீட் பாடத்திட்டம் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.ஒவ்வொரு மாநிலமும் ஒவ்வொரு பாடத்திட்டத்தை நடத்தி வருவதால் மாநில பாடத்திட்டம் வழியாக கல்வி பயின்றவர்களுக்கு நீட் தேர்வு கடினமாக இருக்கும் என்ற வாதமும் முன்வைக்கப்படுகிறது. ஆகவே நீட்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் தொடர்ந்து கொண்டு இருக்கிறது. இதற்கான சட்டப்போராட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.  நீட் தேர்வு தேவையில்லை என்ற எதிர்ப்பு குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருந்தாலும், அது கட்டாயம் என்றாகிவிட்ட நிலையில் மாணவ, மாணவிகள் அதற்கு தங்களை தயார் செய்து பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர். 




இந்தநிலையில் நீட்-2023 தேர்வு இன்று நாடு முழுவதும் 499 நகரங்களிலும், வெளிநாடுகளில் 14 நகரங்களிலும் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் நடக்கிறது. இந்த தேர்வு பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை மொத்தம் 3 மணிநேரம் 20 நிமிடங்கள் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீட் தேர்வு ஆங்கிலம், இந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம், ஒடியா உள்பட 13 மொழிகளில் ஒரே தடவையாக நடக்கிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில்  நீட் தேர்வு இன்று  12 மையங்களில் நடக்கிறது.  மொத்தம் 7,799 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகிறார்கள். தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




குறிப்பாக தேர்வு எழுத வரும் மாணவ ,மாணவிகள் கட்டாயமாக ஹால் டிக்கெட் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் , அரசு அங்கீகாரம் பெற்ற அடையாள அட்டை ஆகியவற்றை  கட்டாயமாக எடுத்து வர வேண்டும் என அறிவித்தப்பட்டுள்ளது.  மேலும் மாணவ, மாணவிகள்  அணிந்திருக்கும் ஹேர்பின் ,தோடு, வளையல், கொலுசு ,மோதிரம் ,வாட்ச் போன்ற எந்த பொருட்களையும் எடுத்து வர அனுமதி கிடையாது. குறிப்பாக மாணவ, மாணவிகளை முழுமையாக சோதனை செய்த பிறகே தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கபட்டனர்.