இந்தியா சுதந்திரம் அடைந்த 75-ம் ஆண்டு அமிர்த பெருவிழாவாகும். இந்த நல்ல நாளில் மத்திய அரசாங்க உள்துறையின் சார்பாக தகவல் தெரிவிக்கபட்டது. அதாவது ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ண கொடி என்ற முனைப்புக்கேற்ப நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை ஏற்றுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த இயக்கம் தேசிய கொடியுடனான நமது தொடர்பை வலுப்படுத்தும் என்று கூறியுள்ளார். டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதள பக்கங்களில் பொதுவாக எல்லோரும் அவரவர் தங்கள் படத்தையோ அல்லது தங்களுக்கு பிடித்த படத்தையோ முகப்பு படமாக வைக்கிறார்கள். இப்போது பிரதமர் நரேந்திரமோடி அனைவரும் தேசிய கொடியை முகப்பு படமாக பதிவேற்றம் செய்யும்படி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவரது சமூகவலைதள பக்கங்களில் இதை செய்து முன்மாதிரியாகிவிட்டார். இந்த ஆண்டு 75-வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாடும் நிலையில், வீட்டுக்கு வீடு மூவர்ண கொடி இயக்கத்தை வலுப்படுத்துவோம். அந்த நாட்களில் தேசிய கொடியை இரவும், பகலும் பறக்கவிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆகஸ்டு மாதம் 13-ந் தேதிக்கும் 15-ந் தேதிக்கும் இடையே மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் நம் தேசிய கொடியை பட்டொளி வீசி பறக்க செய்யுங்கள் அல்லது காட்சிப்படுத்துங்கள் என்று பிரதமர் நரேந்திரமோடி பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். 




இதனை தொடர்ந்து தேசிய கொடி ஏற்றுவதற்காக திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தேசிய கொடியை தயாரிக்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக மாவட்ட நிர்வாகம் சார்பாக நடைபெற்று வந்தது. குறிப்பாக மணச்சநல்லூரில் மகளிர் சுதே உதவி குழு மூலம் தேசியக்கொடி தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் உள்ள லால்குடி மற்றும் துவாக்குடி நகராட்சிகளில் வார்டு உறுப்பினர்கள் வீடு வீடாக சென்று தேசியக்கொடி வழங்கும் பணிகள் தற்போது  நடைபெற்று வருகிறது.  மேலும் 13 ஆம் தேதிக்குள் மாவட்ட முழுவதும் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.




இந்நிலையில் 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி நிர்வாகம் 2 லட்சம் தேசிய கொடிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த தேசியக் கொடி மாநகராட்சியின் 5 மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 40 ஆயிரம் கொடி விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கொடிக்கு ரூ.21 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


திருச்சி மாநகராட்சி பகுதியில் 2 லட்சத்து 75 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதில் இரண்டு லட்சம் மக்களுக்கு கொடி விற்பனை செய்யலாம் என கருதுகின்றனர். இதுபற்றி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், நமது மாநகராட்சி கவுன்சிலர்களும் இதற்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புகிறோம். மேலும் 16 ஆயிரம் கொடிகள் பள்ளிகளுக்கு வழங்க இருக்கின்றோம். கவுன்சிலர்கள் நன்கொடையாளர்கள் மூலம் தேசியக் கொடிகளை வாங்கி வார்டு மக்களுக்கு இலவசமாக கொடுத்தால் நிறைய வீடுகளில் கொடி ஏற்றும் வாய்ப்பு ஏற்படும் என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். துணியினால் செய்யப்பட்ட இந்த கொடி ரூ.21க்கு வாங்கப்பட்டு அதே விலைக்கு பொதுமக்களுக்கு விநியோகிப்பதாகவும், இதில் எந்த லாப நோக்கமும் இல்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண