புதுச்சேரி மாநிலம் திருவாண்டார் கோவில் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இருந்து 13 டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிக்கொண்டு ஒரு டேங்கர் லாரி நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் நோக்கி புறப்பட்டது. டேங்கர் லாரியை கடலூர் மாவட்டம் மேலகுப்பம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த செல்வகணபதி (வயது 35) என்பவர் ஓட்டி வந்தார். சென்னை-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் திருச்சி மன்னார்புரம் ரவுண்டானாவை கடந்து நேற்று முன்தினம் நள்ளிரவு 1.45 மணி அளவில் திருச்சி மாநகர எல்லையான பஞ்சப்பூருக்கு அந்த டேங்கர் லாரி வந்தது. அங்குள்ள சோதனைச்சாவடியை டேங்கர் லாரி கடக்க முயன்ற போது, அங்கு வாகனங்களின் வேகத்தை குறைப்பதற்காக சாலையின் நடுவில் வைக்கப்பட்டு இருந்த இரும்பு தடுப்பு மீது மோதியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்து சில அடி தூரம் இழுத்துச்செல்லப்பட்டு சாலையின் எதிர் திசையில் கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த சோதனைச்சாவடியில் பணியில் இருந்த போலீசார், உடனே ஓடிச்சென்று பார்த்தனர். அப்போது, லாரியின் இடிபாடுகளில் சிக்கி டிரைவர் செல்வகணபதி படுகாயம் அடைந்து கிடந்தார். உடனே லாரியின் முன்பக்க கண்ணாடியை உடைத்து டிரைவரை பத்திரமாக மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

 



 

இதற்கிடையே பின்னால் வந்த அதே நிறுவனத்தை சேர்ந்த மற்றொரு டேங்கர் லாரியை ஓட்டிவந்த டிரைவர், தங்கள் நிறுவன லாரி கவிழ்ந்து கிடப்பததை பார்த்து தனது லாரியையும் ஓரம் கட்டினார். பின்னர் விபத்து குறித்து புதுச்சேரியில் உள்ள அந்த நிறுவனத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பின், லாரியில் உள்ள டேங்கரில் திரவ நிலையில் ஆக்சிஜன் இருப்பதாகவும், ராக்கெட் ஏவ பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் எந்திரத்தின் சோதனைக்கு எரிபொருளாக பயன்படுத்த நாகர்கோவில் அருகே மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு இந்த திரவ ஆக்சிஜன் கொண்டு செல்லப்படுவதாகவும் அங்கிருந்த போலீசாரிடம் கூறினார். அத்துடன், இந்த திரவ ஆக்சிஜன் உள்ள டேங்கரை கவனமாக கையாளாவிட்டால், பெரும் விபத்து ஏற்படும் என்று நிலைமையை விளக்கி கூறினார். அதே நேரம் டேங்கர் லாரியின் டீசல் டேங்க் உடைந்து அதில் இருந்து டீசல் ஆறுபோல் சாலையில் ஓடத்தொடங்கியது. இதனால், உஷாரான போலீசார், துரிதமாக செயல்பட்டு, தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சாலையில் வழிந்தோடிய டீசல், தீப்பிடிக்காத வகையில் ரசாயன நுரையை பீய்ச்சி அடித்து அப்புறப்படுத்தினர். மேலும் திருச்சி மற்றும் விராலிமலையில் இருந்து 2 ராட்சத கிரேன்களும் கொண்டு வரப்பட்டது.

 



 

புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட மாற்று டேங்கர் லாரி நேற்று காலை 8.30 மணி அளவில் விபத்து நடைபெற்ற பஞ்சப்பூருக்கு வந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி மாற்று டேங்கரில் விபத்துக்குள்ளான லாரியில் இருந்த திரவ ஆக்சிஜன் நிரப்பட்டது. இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு விபத்துக்குள்ளான டேங்கர் லாரி கிரேன்கள் உதவியுடன் நிமிர்த்தப்பட்டு, அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. டேங்கர் லாரி சென்னை-மதுரை மார்க்க சாலையில் இருந்து, மதுரை-சென்னை மார்க்க சாலையில் கவிழ்ந்ததால் அந்த வழியாக சுமார் 8 மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகனங்கள் எடமலைப்பட்டி புதூர் வழியாக திருச்சி நகர் பகுதிக்குள் திருப்பிவிடப்பட்டது. விபத்து நடந்தது முதல் மாற்று லாரியில் திரவ ஆக்சிஜனை மாற்றும் வரை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் பதற்றத்துடனேயே இருந்தனர். இந்த விபத்து குறித்து திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.