தமிழ்நாடு முழுவதும் 4500 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் கிராமப்புறங்களில் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் இவைகளால் நடத்தப்படும் 33,700 கிராம அங்காடிகளில் சுமார் 30,000ற்கும், மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்கள் மற்றும் சங்க அளவிலான நடைமுறை பிரச்சனைகளை நிவர்த்தி செய்து கொடுக்க கோரி பதிவாளருக்கு பல கடிதங்களும், அதன் மீது பல சுற்று பேச்சு வார்த்தைகளும் நடத்திய நிலையில் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத காரணத்தால் இன்று அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் திருச்சி மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருச்சி மாவட்ட செயலாளர் துரை காமராஜ் பேசியது : காலதாமதம் இன்றி நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும், தொடக்கக் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கும் நியாயமான புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட வேண்டும்.
மேலும், மாவட்ட தேர்வாணைய குழு, மாநில தேர்வாணைய குழு மூலம் தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் சொந்த ஊரிலிருந்து வெகு தொலைவில் / வேறு மாவட்டத்திலும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்களில் கணிசமான அளவில் பெண் பணியாளர்களும் இடம்பெற்றுள்ளனர். குறைவான சம்பளத்தில் ( மாதம் ரூ.6,250 ), சொந்த ஊர் மற்றும் குடும்பத்தை பிரிந்து வேலை பார்ப்பதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு இவர்களை இவர்களுக்கு சொந்த ஊர் அல்லது அருகாமையில் சங்கங்களுடன் இடம் மாறுதல் செய்து கொடுக்கும் வகையில் எளிமையான நடைமுறையை உருவாக்க வேண்டும். ஒரே பணியில் ஒரே நேரத்தில் உதவியாளராகவோ , விற்பனையாளராகவோ நியமிக்கப்படும் பணியாளர்கள் சில சங்கங்களில் 6 ஆண்டுகளில் பதவி உயர்வு பெற்று செயலாளராகும் நிலையும் பலருக்கு பணி ஓய்வு பெறும் வரை பதவி உயர்வே கிடைக்காத நிலையில் இருந்து வருவதை கருத்தில் கொண்டு பதவி உயர்வில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். கடந்த ஆட்சியில் ஏதோ ஒன்றிரண்டு சங்கங்களில் நடைபெற்ற முறைகேடுகளை மையப்படுத்தி செயலாளர்களை இடம் மாறுதல் செய்யும் பொதுப்பதவித்தரம் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நேர்மையாக பணிபுரியும் செயலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுப்பதிவித்தரத்தில் உள்ள குறைபாடுகளை கண்டறிய அமைக்கப்பட்ட குழு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். உடனடியாக இதில் உள்ள பணியாளர்களை பெரிதும் பாதிக்கும் பிரச்சனைகளை அகற்றி அதன் பின்னர் தேவியின் அடிப்படையில் நியாயமான காரணங்களுக்காக மட்டுமே இடம் மாறுதல் செய்ய வேண்டும்.
குறிப்பாக விற்பனையாளர்களுக்கு அங்காடி பணிகளைத் தவிர வீடு வீடாக சென்று டோக்கன் கொடுத்தல், வருவாய்த் துறையினர் செய்ய வேண்டிய இலவச வேஷ்டி ,சேலை வழங்கும் பணியை அங்காடிகளில் திணிக்கப்படுவது, வீடு வீடாக சென்று மாலை 6.00 அதுல மணிக்கு மேல் கைரேகை பதிய சொல்லி கட்டாயப்படுத்துதல் உள்ளிட்ட கூடுதல் பணிப்பளு சுமத்தப்படுவது கைவிடப்பட வேண்டும்.அங்காடிகளில் தரமற்ற கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனையாளர்களின் விருப்பத்திற்கு எதிராக கட்டாயப்படுத்தி இறக்கி விற்பனை செய்ய நிர்பந்திக்கப்படுவது உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
மேலும் துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து பலமுறை கோரிக்கை மனுக்களை அழித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகையால் எங்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து அறுக்கும் கூட்டுறவுத் துறையும் நிறைவேற்றி கொடுக்க வேண்டுமென நம்புகிறோம். போராட்டம் பணியாளர்களுக்கும் எங்கள் கோரிக்கையை ஏற்காத பட்சத்தில் மாநில சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று எதிர்வரும் 25.03.2024 அன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், இந்த நிலை நீடித்தால் வருகின்ற தேர்தலில் வாக்கு அளிக்கலாமா, புறக்கணிக்கலாமா என்று சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தெரிவிக்கப்படும் என்றார்.