திருச்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலை திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அங்கு இருந்து சாலை மார்கமாக ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறும் 25ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்று வரும் பன்னாட்டு விளையாட்டு கருத்தரங்கு நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.
திருச்சி திருவானைக்காவல் வழியாக ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரிக்கு வருகை தரும் தமிழக ஆளுநர் RN ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 40க்கும் மேற்பட்டோர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிப்பதற்காக திருச்சி திருவானைக்கோவில் சிக்னல் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக ஆளுநர் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்களையும், கொள்கைகளையும் விமர்சிப்பதாகவும் இதனை கண்டித்து திருச்சி மாநகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கருப்புக் கொடி காட்டி தமிழக ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். திடீரென தமிழக ஆளுநர் வரும் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அப்பகுதியில் 100க்கும் மேற்பட்ட போலீஸார் , போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறபடுத்தினர். மேலும், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 40 பேரை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். திடீர் சாலை மறியல் காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.