தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜனவரி மாதம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ் நிலமானது மிகத்தொன்மை வாய்ந்தது. தமிழின் தொன்மையையும், தமிழரின் பண்பாட்டையும் அறிவியல் பூர்வமாக நிறுவ வேண்டுமானால் முறையான அகழாய்வுகள் அவசியமாகும். அண்மைக்காலமாக, கீழடி, அழகன்குளம், கொற்கை, சிவகளை, ஆதிச்சநல்லூர், கொடுமணல், மயிலாடும்பாறை, கங்கை கொண்ட சோழபுரம் ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகள் தமிழகத்தின் தொன்மையை புதிய காலக்கணிப்பு மூலம் பல நூற்றாண்டு காலத்திற்கு முன்னோக்கி எடுத்து சென்றுள்ளது என்றால் அது மிகையாகாது. கீழடி அகழாய்வு மற்ற அகழாய்வுகளுக்கு முன்னோடி அகழாய்வாக திகழ்கிறது.

 

இதுவரை கங்கை சமவெளியில் கி.மு. 6ம் நூற்றாண்டில் இருந்த நகரமயமாக்கம் தமிழகத்தில் இல்லையென்றும், பிராமி எழுத்து மவுரியர் தோற்றுவித்தது என்றும் கருதுகோள்கள் இருந்தன.  அத்தகைய கருதுகோள்களுக்கு அறிவியல்பூர்வமாக விடையளித்துள்ளது கீழடி அகழாய்வு. தமிழகத்தில் கி.மு. 6ம் நூற்றாண்டிலேயே நகரமயமாக்கம் ஏற்பட்டிருந்தது என்பது மட்டுமல்லாமல், படிப்பறிவும், எழுத்தறிவும் பெற்ற மேம்பட்ட சமூகமாக விளங்கியதை கீழடி அகழாய்வு நிலைநிறுத்தியுள்ளது. மேலும் அகழாய்வு பணிகள் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தொடங்கி செப்டம்பர் மாதம் இறுதிவரை நடைபெறவுள்ளது. மேலும் இதற்காக வரவு-செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள ரூ.5 கோடி நிதியில் அகழாய்வுகள், களஆய்வுகள் மற்றும் சங்க கால கொற்கை துறைமுகத்தினை அடையாளம் காண முன்கள புல ஆய்வு பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளன என்றார்.
 




 

இதனை தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை மூலம் அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் அருகே உட்கோட்டை கிராமத்தில் உள்ள, சோழப்பேரரசரான முதலாம் ராஜேந்திர சோழன் மற்றும் அவருக்கு பின்னால் ஆண்ட சோழ மன்னர்களின் அரண்மனை இருந்ததாக கூறப்படும் மாளிகைமேடு பகுதியில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதற்கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கி நடைபெற்றன. இந்த பணியின்போது கூரை ஓடுகள், பானை ஓடுகள், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தினாலான ஓடுகள், இரும்பினாலான ஆணிகள், சீன கலைநயமிக்க மணிகள் போன்ற பொருட்கள், பானை விளிம்புகள், சிறிய அளவிலான அரிய பொருட்கள், கட்டிடங்கள் இருந்ததற்கான எச்சங்கள் கிடைத்தன. மேலும் முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் ஒரு பாகத்தின் சுற்றுச்சுவரும், பின்னர் அரண்மனையின் தொடர்ச்சியாக 2-வது பாகமும் கண்டறியப்பட்டது. வடிகால் அமைப்பு போன்ற சுவர் ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முதற்கட்ட அகழாய்வு பணி நிறைவடைந்தது.

 



 

இந்நிலையில் இப்பகுதியில் இரண்டாம் கட்ட அகழாய்வு பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் 11ஆம் தேதி காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து தற்போது 10-க்கு 10 என்ற சதுர அடி அளவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில் அரண்மனையின் சுற்றுச்சுவர்கள், இரும்பினாலான ஆணிகள், மண்பாண்ட விளிம்புகள் போன்றவை கிடைத்துள்ளன. கையில் அணியும் காப்பு போன்ற தங்கத்தினாலான காப்பு ஒன்று தற்போது கிடைத்துள்ளது. இந்த காப்பு சுமார் 7.920 கிராம் எடை கொண்டதாக உள்ளது. இதன் நீளம் 4.9 மி.மீட்டரும், அதன் நடுவில் அமைந்துள்ள தடிமனான பகுதியின் அளவு 4 மி.மீட்டர் என்ற அளவிலும் உள்ளது. மேலும் தொடர்ந்து நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சி பணியில் நேற்று சிறு சிறு எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளன. தொல்லியல் துறையின் ஆய்வுக்கு பின்னரே இது மனிதர்களின் உடல் எலும்புகளா? என்பது தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். தற்போது 12 பணியாளர்கள் மட்டுமே அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.