சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத்தலைமையை கொண்டுவருவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஜூலை 11-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்று உத்தரவிட்டது. அதேநேரம், அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லுமா என்பதை உயர்நீதிமன்றம் தான் முடிவுசெய்ய வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் மனுக்களை தாக்கல் செய்தனர். இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டு, அதில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் மட்டுமே மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து, பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை கடந்த 19-ம் தேதி விசாரித்த நீதிபதி குமரேஷ் பாபு, பொதுச் செயலாளர் தேர்தல் நடவடிக்கைகளை தொடர அனுமதித்தார். ஆனால், தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதித்தார். இதனைத் தொடர்ந்து, இரு வழக்குகளையும் ஒன்றாக இணைத்து கடந்த 22-ம் தேதி நீதிபதி விசாரித்தார். அப்போது, அனைத்து தரப்பினரும் 7 மணிநேரங்களுக்கு வாதங்களை முன்வைத்தனர்.




இதனைத் தொடர்ந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு அளித்த தீர்ப்பில், சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடத் தடையில்லை என்றும் தீர்ப்பளித்தார். அதிமுக பொதுக்குழு செல்லும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில் தமிழகம் முழுதும் அதிமுகவினர் இதனை கொண்டாடும் வகையில் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கும் உற்சாகமாக தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். மேலும் ஒ.பன்னீர் செல்வம் பொதுக்குழுவை எதிர்த்து தாக்கல் செய்த மனு செல்லாது என்றும் அதிமுக பொதுக்குழு செல்லும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருப்பதை அடுத்து திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமையில் 50க்கும் அதிகமான அதிமுகவினர் ஒன்று கூடி இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். இதில்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய அதிமுக புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான ப.குமார் வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் இனிப்புகளை வழங்கினார்.  மேலும் சாலையில் பட்டாசுகளை வெடித்து தங்களது மகிழ்ச்சியை அதிமுகவினர் வெளிப்படுத்தினர்.




இதனை தொடர்ந்து  செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ப.குமார் பேசுகையில், “இந்த தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்று தான் - எடப்பாடி அவர்கள் பொது செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்பது அனைத்து தொண்டர்களின் கருத்தாக இருந்தது. புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் எடப்பாடியார் இன்று கழகத்தை கட்டி காத்து வருகிறார். வரக்கூடிய பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களுக்கு முழுமையாக உழைத்து வெற்றி பெற செய்வோம்” என்றார். 





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.