அரியலூர் மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வைத்தியநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன். விவசாயி. இவரது மனைவி வனிதா. இவர் அரியலூர் காவல் நிலையத்தில் முதல்நிலை காவலராக பணியாற்றி வருகிறார். இவர்களின் மகள் அபினா (வயது 16). இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்- 2 படித்து பொதுத்தேர்வு எழுதினார். இந்த தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் 600-க்கு 397 மதிப்பெண்கள் பெற்று அபினா தேர்ச்சி அடைந்தார்.
இருப்பினும் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்காமல், குறைவாக மதிப்பெண்கள் பெற்றதாக எண்ணி, அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலை சகாதேவன் வயலுக்கும், வனிதா காவல் நிலையத்திற்கும் சென்றுவிட்டனர். பின்னர் மதியம் சகாதேவன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது அபினா தூக்குப்போட்டுக்கொண்ட நிலையில் பிணமாக தொங்கியதை கண்டு கதறி அழுதார்.
மேலும் இதுகுறித்து வெங்கனூர் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் அங்கு வந்து அபினாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அபினா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து 10, 12 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தேர்வில் தோல்வி அடைந்தால், அதனை நினைந்து கவலைபடாமல் அடுத்தது என்ன செய்யவேண்டும் என யோசிக்க வேண்டும், மீண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம்.
இந்நிலையில் மாணவர்கள் தோல்வியை கண்டு துவண்டு போகாமல், தவறான முடிவுகளை எடுக்காமல் இருக்க நடப்பாண்டில் இருந்து பொதுத்தேர்வு முன்பே உளவியல் ஆலோசனை வழங்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்