தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பட்டாசு ஆலைகளில் பட்டாசு உற்பத்தி செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே உள்ள விரகலூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த நாட்டு வெடி தயாரிப்பு ஆலையில் கடந்த 9-ந் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 12 பேர் பலியானார்கள்.
இதையடுத்து, பட்டாசு உற்பத்தி ஆலை மற்றும் பட்டாசு விற்பனை கடைகளின் உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் கற்பகம் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி முன்னிலை முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
இந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் பேசியது, "பட்டாசு ஆலைகள் மற்றும் கடைகளில் அனுமதிக்கப்பட்ட எடை அளவை விட கூடுதலாக பட்டாசை சேமிக்க கூடாது. 18 வயதிற்குட்பட்டவா்களை பட்டாசு விற்பனையில் ஈடுபடுத்தக்கூடாது. தீத்தடுப்பு உபகரணங்கள் போதிய அளவில் வைத்திருக்க வேண்டும். அவசரகால வழிகள் எளிதில் வெளியறேக்கூடியதாக இருக்க வேண்டும். பட்டாசு பண்டல்களை இறக்கும் போதும், ஏற்றும் போதும் கவனமாக கையாள வேண்டும்.
பட்டாசு தொடர்பான பணிகளில் அனுபவமில்லாத உள்ளூர் ஆட்களை பயன்படுத்தக்கூடாது. அனுமதிக்கப்பட்ட அளவு நபர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மேலும், உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் மட்டுமே பணிகளை மேற்கொள்ள வேண்டும். பட்டாசு ஆலை மற்றும் கடைக்கு அருகே புகைப்பிடிக்கவோ, பட்டாசு வெடிக்கவோ கூடாது. இதுகுறித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும். பட்டாசு இருப்பு குறித்து இருப்பு பதிவேடு முறைப்படி எழுதி அன்றாடம் பதிய வேண்டும். உரிமைதாரர் மற்றவர்களுக்கு பட்டாசு கடையை வாடகைக்கோ, குத்தகைக்கோ விடக்கூடாது.
கண்காணிப்பு குழுக்கள்:
மேலும், அங்கீகரிக்கப்பட்ட, அனுமதிக்கப்பட்ட குறியீடுகளுடன் உள்ள லேபிள் ஒட்டிய பட்டாசுகளை அதற்குரிய பெட்டிகளில் மட்டுேம வாங்கவோ, விற்பனை செய்யவோ வேண்டும். பட்டாசு உற்பத்தி ஆலைகள் மற்றும் விற்பனை கடைகளில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வுக்குழுவினர் சுழற்சி முறையில் அவ்வப்போது பட்டாசு ஆலை மற்றும் விற்பனை கடைகளில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
அரசின் விதிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிப்பிலும், விற்பனையிலும் ஈடுபடுங்கள். அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். உயிர் விலைமதிப்பற்றது. விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
முன்னதாக பெரம்பலூர் கலெக்டர் கற்பகமும், போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவியும் குன்னம் தாலுகா, அகரம்சீகூரில் வாண வேடிக்கை வெடி தயாரிக்கும் ஆலையினையும், பெரம்பலூர் நான்கு ரோடு சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள பட்டாசு விற்பனை கடையினையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.