அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மனு அளிப்பதற்காக பொதுமக்கள் வந்தனர். இந்நிலையில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன் தனது மனைவியுடன் வந்த ஒருவர், கேனில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை திடீரென தனது உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட அருகில் இருந்த காவல்துறை மற்றும் பொதுமக்கள் அவரை தடுத்து, அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பறித்தனர். மேலும் அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதையடுத்து அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் தொடர் விசாரணையில் அவர், திருமானூர் ஒன்றியம் சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவை சேர்ந்த குமாரவேல், விவசாயி என்பதும், அவருடன் வந்தது அவருடைய மனைவி கண்ணகி என்றும் தெரியவந்தது. மேலும் இவர் சாத்தமங்கலம் அருங்கால் எல்லையில் சுமார் 6.5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மக்காச்சோளத்தை கடந்த ஆடி மாத கடைசியில் பயிரிட்டிருந்தார். அப்போது பெய்த மழையை தொடர்ந்து அருகில் உள்ள கோத்தாரி சர்க்கரை ஆலையில் இருந்து கழிவுநீர் வெளியேறி, அவரது நிலத்தில் புகுந்ததால் மக்காச்சோள பயிர் முற்றிலும் வீணாகி போனதாக கூறப்படுகிறது.
மேலும் இதுகுறித்து குமாரவேல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி கீழப்பழுவூர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து நிலத்தில் இருந்த தண்ணீரின் மாதிரிகளை சேகரித்து, ஆய்வு முடிவுகளை தெரிவிப்பதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். ஆனால் அதன்பிறகு எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், இதுபற்றி கடந்த மார்ச் மாதம் அரியலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கண்ணகி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.
இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இருப்பினும் இழப்பீடு தொகை வழங்காததால் தான் குத்தகைக்கு வழங்க வேண்டிய ரூ.1 லட்சம் மற்றும் வயலுக்கு செலவழித்த தொகை என மொத்தம் ரூ.3 லட்சம் தனக்கு இழப்பு ஏற்பட்டதாகவும், பல்வேறு இடங்களில் மனு அளித்தும் எவ்வித பயனும் இல்லாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றதாகவும், குமாரவேல் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதையடுத்து தங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணகி மனு அளித்தார். விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியது, ‘’மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டத்தில் வரும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கபட்டு வருகிறது. ஆனால் ஒரு சில புகார்களின் மீது எடுக்கபடும் நடவடிக்கை தாமதமாக ஆகிறது. ஆகையால் பொதுமக்கள் குறைகளை தீர்க்கவே இந்த கூட்டம் நடத்தப்படுகிறது, மேலும் மக்கள் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடவேண்டாம் என வேண்டுக்கோள் விடுத்துள்ளார்.