கொரோனா காரணமாக  நிறுத்தப்பட்டு இருந்த திருச்சி -கொழும்பு இடையேயான விமான சேவை வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி முதல் இயக்க உள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்தியாவில் இருந்து சர்வதேச அளவிலான விமான சேவை நிறுத்தப்பட்டு இருந்தது. வெளிநாடுகளில் விமான சேவை இல்லாததன் காரணமாக தவித்து வந்த பயணிகளை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டம் மூலம் சிறப்பு விமானங்களை இயக்கி பயணிகளை மீட்டு வருகிறது. மேலும் இந்தியாவில் சிக்கிய வெளிநாட்டு பயணிகளும், தங்களது நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா முற்றிலும் நீங்காத நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மட்டும் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதன்படி திருச்சியிலிருந்து நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் இயக்கப்பட்டு வரும் நிலையில், திருச்சி - கொழும்பு இடையான விமான சேவை மீண்டும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இதன்படி வரும் செப்டம்பர் மாதம் 2 ஆம் தேதி முதல் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையை அறிவித்துள்ளது. இதன்படி இந்த விமானம் கொழும்பிலிருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு காலை 10 மணிக்கு வந்தடையும். பின்பு திருச்சியில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு பகல் 12 மணிக்கு கொழும்பு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மட்டுமல்லாது இந்தியாவுக்கும் தனது சேவை குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது. இதற்கான நிலையான வழிகாட்டுதல் முறையையும் வெளியிட்டுள்ளது இதன்படி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வரும் பயணிகள் குறிப்பாக இந்தியா சுற்றுலா பயணிகள், ரெசிடெண்ட் விசா வைத்துள்ள வெளிநாட்டு பயணிகள், இரட்டை குடியுரிமை பெற்றவர்கள், ஸ்ரீலங்கா குடிமக்கள் ஆகியோருக்கு வெளிநாட்டு அமைச்சகத்திடம் இருந்து முந்தைய அனுமதி தேவையில்லை, எனிலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் இருந்து கொழும்புக்கு வரும் பயணிகள் கொரோனா தொற்று தடுப்பூசி  இரண்டு தவனையையும் செலுத்தி 14 நாட்களை முடித்திருக்க வேண்டும்.




இந்தியாவில் இருந்து புறப்படும் போது ஒரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து ஆங்கிலத்தில் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். கொழும்பில் இறங்கிய பின் மற்றொரு ஆர்டிபிசிஆர் சோதனை முடித்து அரசு அறிவித்துள்ள ஓட்டலில் 24 மணி நேரம் தங்கி நெகட்டிவ் சான்றிதழ் பெற வேண்டும். இதன்பின் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை, பாசிட்டிவ் சான்றிதழ் வந்தால் அரசு கூறும் ஓட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட வழிமுறைகளை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது திருச்சியிலிருந்து இலங்கை செல்வோா் மிகுந்த சிரமங்களுடன் சென்னை வழியாகவே பயணிக்கின்றனா். அதேபோல அரபு நாடுகளிலிருந்து வருவோரும் இலங்கை வழியாக திருச்சி வந்து செல்ல முடிவதில்லை. இதனால் இலங்கைக்கு விமானப் போக்குவரத்து தொடங்குவதை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனா்.