திருச்சி மாநகராட்சியை மேம்படுத்துவதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் பல்வேறு திட்ட பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சாலையில் வண்ணங்கள் பூசுவது ,ஒளிரும் விளக்குகள் அமைப்பது பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


குறிப்பாக மாநகராட்சியில் சாலைகள் மேம்படுத்துவது, பாதாள சாக்கடை மேம்படுத்துதல், குடிநீர் வடிகால் அமைத்தால் உள்ளிட்ட பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. 


இதனால் பல்வேறு இடங்களில் குடிநீரில் அசுத்தம் கலந்து வருவதால் காய்ச்சல் நோயால் பலர் பாதிக்கப்பட்டு வருவதாக புகார்கள் தொடர்ந்து எழுந்து வருகிறது.


இந்நிலையில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19, 20 ஆகிய  வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


இதன் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு ஆரம்பத்தில் வாந்தி, பேதி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சல் நோயால் பாதிக்கபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 


மேலும்,  பாதிக்கப்பட்ட மக்கள் சிலர் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று  குடிநீரை காய்ச்சி குடிக்கும்படி கூறி வருகின்றனர் .




திருச்சியில் குடிநீரில் அசுத்தம்,  பொதுமக்கள் அதிர்ச்சி


இந்த நிலையில் நேற்று சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் குடி நீருடன் கழிவு நீர் கலந்து வந்ததோடு மட்டும் அல்லாமல் குடிநீரில் ஏராளமான பழுக்கள் நெளிந்ததால் அச்சம் அடைந்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள்  குடிநீர் செல்லக்கூடிய பகுதிகளை தோண்டி எந்த இடத்தில் குடிநீருடன் கழிவுநீர் கலக்கிறது என ஆய்வு மேற்கொண்டனர்.மேலும் குடிநீரில் உள்ள குளோரின் அளவை பரிசோதனை செய்தனர்.


அப்போது அங்கு வந்த 19வது வார்டு கவுன்சிலர் சாதிக் பாட்சா வை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 100க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி ,வயிற்றுப் போக்கு ஏற்பட்டு இறந்துள்ளனர் என் பொதுமக்கள் கூறியதற்கு, ஆதாரமில்லாமல் குறை கூறக்கூடாது என கவுன்சிலர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. 




குடிநீரில் அசுத்தம், 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிப்பு..


அப்போது சுகாதாரம் இல்லாமல் குடிநீரை அருந்தியதால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில் வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்ட போது மருத்துவர்கள் தண்ணீர் மூலமாக தான் இந்த பாதிப்பு ஏற்பட்டதாக கூறியதாகவும், குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்கவும் அறிவுறுத்தியதாக கூறினர்.


இந்நிலையில் மாநகராட்சி சார்பில் குடிநீரில் கழிவுநீர் கலக்கும் இடத்தை கண்டுபிடிக்க காலதாமதம் ஆகி வரும் நிலையில் வாகனங்கள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் அந்த பகுதி பொதுமக்கள் உயிருக்கு பயந்து கேன்களில் விற்கப்படும் குடிநீரை வாங்கி குடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


மேலும் தினந்தோறும் குடிநீரை அருந்துவதால் காய்ச்சல், மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். மாநகராட்சி அலட்சியப் போக்கில் செயல்படாமல் ,உடனடியாக மக்களின் உயிர் மீது அக்கறை வைத்து தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.