தமிழ்நாட்டில் காலாவதியான பொருள்களை முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும் என்கிறது, உணவுப் பாதுகாப்புச் சட்டம். ஆனால், சில கடைகளில் காலாவதி தேதியை மாற்றிவிட்டுப் பொருள்களை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கிப் பயன்படுத்தும் மக்கள் பல்வேறு உபாதைகளுக்கு ஆளாகிறார்கள். மேலும் உணவகங்களில் சமைக்க பயன்படுத்தபடும் பொருட்கள், சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அதேசமயம் இறைச்சி வகைகள் சமைக்க பயன்படுத்தும் போது நல்லதாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவு பொருட்களை சாப்பிடுவதன் மூலம் உயிரிழப்புகள் நடந்து வருகிறது. ஆகையால் தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் ஆய்வு மேற்கொள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள உணவகங்களில் விதிமுறைகளை பின்பற்றி சரியான முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றனவா, உணவுகளை பாதுகாக்க முறையான பிரீசர் வசதி உள்ளதா என்று ஆய்வு செய்யவேண்டும். மேலும் இவ்வாறு உரிய நெறிமுறைகள் பின்பற்றப்படாத மற்றும் தரமற்ற உணவுகளை விற்பனை செய்யும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் இறந்த சம்பவத்தை தொடா்ந்து புதுக்கோட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் அதிகாரிகள் நகரப்பகுதியில் புதிய பஸ் நிலையம் அருகே, பழைய பஸ் நிலையம், அண்ணா சிலை அருகே, டி.வி.எஸ். கார்னர் அருகே உள்ளிட்ட இடங்களில் உள்ள அசைவ ஓட்டல்களில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் சமையல் செய்யும் இடம் மற்றும் கடைகளில் வைக்கப்பட்டிருந்த பிரிட்ஜ் உள்ளிட்டவற்றை பார்வையிட்டனர். மேலும் சிக்கன்களை தயார் செய்து வைத்திருந்ததையும் பார்த்தனர். மேலும் ஷவர்மா கடைகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனர். சாலையோர கடைகளிலும் சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது கெட்டுப்போன சிக்கன்கள் பயன்படுத்தப்பட்டதை கண்டறிந்தனர். இதில் சுமார் 30 கிலோ சிக்கன்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார். மேலும் அதனை பினாயில் மற்றும் ஆசிட் ஊற்றி அழித்தனர். இதேபோல ஷவர்மா கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது என எச்சரித்தனர். ஒரு ஓட்டலுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தொிவித்தனர். மாவட்டம் முழுவதும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெறும் என்றனர். இந்த சோதனையின் போது நகராட்சி சுகாதார பிரிவு அலுவலர்களும் உடன் இருந்தனர்.
மேலும் அனைத்து உணவங்களிலும் உணவின் தரத்தை பற்றி உடனடியாக பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் உணவு பாதுக்காப்பு துறை சார்பாக தொலைபேசி எண், மற்றும் புகார் எண் என தனி தனியாக ஒட்டவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து இனி வரும் காலங்களில் தரமில்லாத பொருட்களை பயன்படுத்தும் உணவங்கள் மீதும், உரிமையாளர் கடுமையான சட்டரீதியான நடவடிக்கை எடுக்கபடும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.