தமிழகத்தில் கெட்டுப்போன சிக்கன் சார்ந்த உணவை சாப்பிடுவதால் மக்கள் பாதிக்கபட்டு வருகிறார்கள். இதுகுறித்து தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பரமணியன் கூறியது’’ஷவர்மா என்பது ஒரு மேலை நாட்டு உணவு. இறைச்சியை சுருட்டி வைத்து அதில் மசாலா சேர்த்து தீயில் வாட்டி சமைத்து கொடுக்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ள பருவநிலைக்கு இறச்சியை அவ்வாறாக பதப்படுத்திக் கொடுப்பது பொருந்தும். அங்கு நிலவும் மைனஸ் டிகிரி மாதிரியான சூழலில், அதை வெளியிலேயே வைத்திருந்தாலும் அது கெட்டுப்போகாது. ஆனால், நம் நாட்டு பருவநிலைக்கு, அதை எப்போதுமே வெளியில் தொங்கவிட்டு, சுரண்டிக் கொடுப்பது சரிவராது. மேலும், அந்தக்கறியை சேமித்து வைப்பதற்கான ஸ்டோரேஜ் வசதியும் சரிவர பல கடைகளில் இருப்பதில்லை. எனவே மக்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாம் நமக்கான உணவுகளை உண்போம். அதனை விடுத்து, ஷவர்மா மாதிரி புதிய, புதிய பெயர்களில் வரும் உணவுகளை வாங்கி உண்டு உடலை கெடுத்துக்கொள்ள வேண்டாம். தமிழகம் முழுவதும் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு தொடரும் என்றார்

 




இந்நிலையில் தான் கடந்த சில தினங்களுக்கு முன்பு  தஞ்சையில் மூவருக்கு ஷவர்மா சாப்பிட்டு பாதிப்பு ஏற்பட்டது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அரசு கால்நடை மருத்துவக்கல்லூரியில் கன்னியாகுமரியைச் சேர்ந்த பிரவீன் (22), புதுக்கோட்டையைச் சேர்ந்த பரிமலேஸ்வரன் (21), தருமபுரியைச் சேர்ந்த மணிகண்டன் (22) ஆகியோர் விடுதிகளில் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அண்மையில் மூன்று பேரும் ஒரத்தநாடு பிரிவு சாலை அருகே உள்ள பாஸ்ட் புட் ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு திரும்பினர். அப்போது திடீரென பிரவீன் உள்ளிட்ட 3 பேரும் அடுத்தடுத்து வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். இதையடுத்து 3 மாணவர்களும் சிகிச்சைக்காக ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மாணவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டனர். மேலும் தமிழகம் முழுவதும் கோழி இறைச்சிக்கடையில் ஆய்வுகள் தொடரும் என்றார்.




 

இதனை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கோழி இறைச்சிக்கடை, ஷவர்மா விற்பனை செய்யும் இடங்களில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். 2-வது நாளாக நேற்று திருச்சி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தீவிரமாக சோதனை நடத்தினர். திருச்சி மத்தியபேருந்து நிலையம், தில்லை நகர், தென்னூர், மணப்பாறை, முசிறி உள்ளிட்ட இடங்களில் உள்ள ஓட்டல்களில் நடத்திய சோதனையில் கெட்டுப்போன இறைச்சிகள் வினியோகம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 47 கடைகளில் 138 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சியை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இதை விற்பனைக்காக வைத்திருந்த 5 கடைகளுக்கு துண்டு பிரசுரம் வழங்கி எச்சரித்தனர். மேலும் 4 கடைக்காரர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

தொடர்ந்து இது போல விற்பனை செய்தால் கடை களுக்கு சீல் வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அவர்கள் கூறுகையில், அசைவ உணவகங்கள், ஓட்டல்கள் நடத்தும் உரிமையாளர்கள் முதலில் பொதுமக்களுக்கு தரமான பொருட்களை வினியோகம் செய்ய வேண்டும். இல்லையென்றால் ஓட்டல்களில் தொடர்ந்து ஆய்வு செய்யப்பட்டு தரமில்லாத பொருட்கள் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.