தென் மண்டல காவல்துறை தலைவரது தனிப்படையின் ஒரு பிரிவினர், போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான சிறப்பு படையாக செயல்பட்டு வருகிறார்கள். அப்பிரிவில் உள்ள ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், கடந்த ஒரு வார காலமாக கஞ்சா கடத்தும் கும்பலை கண்காணித்து வந்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் இருந்து திருச்சி வழியாக இரண்டு கார்களில் கஞ்சா கடத்தி வந்த கும்பலை கைது செய்வதற்காக பின் தொடர்ந்து துரத்தி உள்ளார்கள். அதில் 60 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த காரை முதலில் தடுத்து நிறுத்தி, அதிலிருந்த கடத்தல்காரர்களை கைது செய்த போலீசார், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும், கஞ்சாவையும் பறிமுதல் செய்து, போலீஸ் பாதுகாப்போடு மதுரைக்கு அனுப்பி வைத்தனர். கஞ்சா கடத்தி வந்த மற்றொரு காரை ஆந்திராவில் இருந்து துரத்தும் போது, காவல்துறையினரின் வாகனம் இடையில் சற்றுநேரம் பழுதுபட்டு நின்றுவிட்டது. இதனால் அந்த காரை துரத்திவந்த தென் மண்டல காவல்துறையினர், மத்திய மண்டல காவல்துறையினரின் உதவியை நாடியுள்ளனர்.
மத்திய மண்டல காவல்துறையினர் திருச்சி சமயபுரம் டோல் பிளாசா அருகே கஞ்சா கடத்தி வந்த காரை தடுத்து நிறுத்தினார்கள். சற்று நேரத்தில் தென் மண்டல காவல்துறையினரும் அங்கு வந்து சேர்ந்தனர். கஞ்சா கடத்திய கும்பலை கைது செய்த பெருமையை யார் தக்க வைத்துக் கொள்வது என்று இரு தரப்பினரிடம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் தென்மண்டல போலீசாரின் எண்ணிக்கை கூடுதலாக இருந்ததால், மத்திய மண்டல போலீசாரால் அவர்களை சமாளிக்க முடியவில்லை. தென்மண்டல போலீசார், ஒரு காவலரை கஞ்சா கடத்தி வந்த காரின் ஓட்டுனராக மாற்றி, அந்த காரையும், கைது செய்யப்பட்ட குற்றவாளியும் மதுரையை நோக்கி அனுப்பிவைத்தனர். இதுகுறித்து திருச்சியில் உள்ள போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருச்சி கிராப்பட்டி அருகே அந்த காரை திருச்சி போலீசார் மீண்டும் மடக்கிப்பிடித்தனர். காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளின் உத்தரவின்பேரில், ஒரு வார காலம் கண்காணித்து, ஆந்திராவில் இருந்து துரத்தி வந்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில், தென் மண்டல போலீசாரை, மத்திய மண்டல போலீசார், மதுரைக்கு வழியனுப்பிவைத்தனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்