திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே மாடக்குடி பஞ்சாயத்துக்குட்பட்ட ரைட் சிட்டி அருகே சுடுகாடு பகுதியையொட்டி உள்ள ஒரு தனியார் அரிசி ஆலையில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று, அதனை மாவாக அரைத்து விற்பனை செய்யப்படுவதாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறைக்கு  தகவல் கிடைத்தது.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு உத்தரவின்படி மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன், மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அலுவலர் மற்றும் வருவாய் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகள் அந்த மில்லுக்கு சென்றனர். தொடர்ந்து அங்கு மில்லின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டனர்.  அப்போது, அங்கு ரேஷன் அரிசி மற்றும் கோதுமை ஆகியவை மூட்டை, மூட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மேலும், அரவை இயந்திரத்தில் அரைத்த கோதுமை மற்றும் அரிசி மாவு தனியாக மூட்டையில் இருந்ததும் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக  காவல்துறையினரை கண்டதும் அங்கிருந்த சிலர் தப்பி ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து அரிசி ஆலையில் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், காரில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து அந்த ஆலையில் வைத்து, அதை கோதுமையுடன் சேர்த்து மாவாக அரைத்து கோழி தீவனம் மற்றும் மாட்டு தீவனத்துக்காக தயார் செய்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 



 

இதையடுத்து அங்கு மூட்டை, மூட்டையாக பதுக்கி வைத்திருந்த 5 டன் ரேஷன் அரிசி, 450 கிலோ கோதுமை, 15 டன் குருணை அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஆகியவற்றை காவல்துறையினர்  பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் அதிகாரிகள் அந்த மாவு மில்லுக்கு சீல் வைத்தனர். தொடர்ந்து அதிகாரிகள் இது பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும் மாவு மில்லில் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை மூட்டை மூட்டையாக கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து இதற்கு உடந்தையாக இருந்தார்கள் யார்? எப்படி இந்த கிடங்கிற்கு இவ்வளவு மூட்டைகள் கொண்டு வரப்பட்டன என்பது பற்றி அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். ரேஷன் அரிசி மற்றும் கோதுமையை கடத்தி ரகசியமாக மாவாக அரைத்து விற்பனை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 




மேலும், இது குறித்து உணவு கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்து அரிசி ஆலையின் உரிமையாளர் யார்?. எங்கிருந்து ரேஷன் அரிசியை கடத்தி வருகிறார்கள். எத்தனை ஆண்டுகளாக அரிசி ஆலை இயங்கி வருகிறது. ஆலைக்கு உரிய அனுமதி உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, ரேஷன் அரிசியை கடத்திச் சென்று மாவாக அரைத்து விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்டு வந்த அரிசி ஆலைக்கு சீல் வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மண்ணச்சநல்லூர் வட்ட வழங்கல் அதிகாரி மரகதவள்ளி தலைமையில் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று அரிசி ஆலைக்கு சீல் வைத்தனர். திருச்சி மாவட்டத்தில் ரேஷன் அரிசியை கடத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார்.