கோவையில் இருந்து தன்னை திருச்சி அழைத்து வரும் வழியில் 5 பெண் காவலர்கள் என்னுடைய வலது கையை முறுக்கி கடுமையாக தாக்கினர் என திருச்சி 3வது முதன்மை குற்றவியல் நடுவர் ஜெயபிரதாவிடம் சவுக்கு சங்கர் பரபரப்பு புகாரை தெரிவித்தார்.


ஏற்கனவே, தன்னுடைய கை உடைக்கப்பட்டு அதற்கு மாத்திரைகள் எடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், எனக்கான மருந்து, மாத்திரைகளை கூட வழங்காமல், தன்னை பெண் காவலர்கள் தாக்கியதாகவும், என்னை தாக்கும்போது அதனை புகைப்படம், வீடியோ எடுத்து காவலர்கள் இருக்கும் வாட்ஸ் குழுவில் பகிர்ந்துக்கொண்டதாகவும் சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்தார்.


தனக்கு கை, உடம்பெல்லாம் வலிப்பதாகவும் தனக்கு உடனடியாக சிகிச்சை வேண்டும் என்று சவுக்கு சங்கர் கேட்டுக்கொண்டதையடுத்து, அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் நீதிபதி. 



“பெண் காவலர்கள் என்னை தாக்கினர்” - நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் பரபரப்பு குற்றச்சாட்டு


இதுகுறித்து பெண் காவல் ஆய்வாளரை அழைத்து நீதிபதி கேட்டபோது, சவுக்கு சங்கர் பொய் சொல்வதாகவும், அப்படி யாரும் அவரை தாக்கவில்லை என்றும் கூறினார். அதோடு, உணவு உண்ண அழைத்தும் சவுக்கு சங்கர் வர மறுத்துவிட்டார் என்று தெரிவித்தார்.


ஏற்கனவே, கோவை சிறை கண்காணிப்பாளர் தன்னை தாக்கி கையை உடைத்துவிட்டதாக சவுக்கு சங்கர் சொல்லி வரும் நிலையில், இப்போது பெண் காவலர்கள் மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டை அவர் முன் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.