திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள சப்தரிஷீஸ்வரர் கோயில் பங்குனி தேரோட்டம் கடந்த 8ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் சுவாமி புறப்பாடு மற்றும் நாயன்மார்கள் வீதி உலா நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதனை யொட்டி அலங்கரிக்கப்பட்ட பிரமாண்டமான பெரிய தேரில் சோமாஸ் கந்தர், பெருந்திருப்பிராட்டியார் அம்மன் எழுந்தருளினர். தொடர்ச்சியாக முருகன், விநாயகர், சப்தரிஷிகள் உள்ளிட்ட 4 தெய்வங்களின் தேர் வந்தது. 5 தேர்களையும் பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். காலை 8.30 மணிக்கு தொடங்கிய தேரோட்டம் மாலை 5.45 மணியளவில் நிலையை அடைந்தது. இதில், லால்குடி சவுந்தரபாண்டியன் எம்.எல்.ஏ., லால்குடி ஒன்றியகுழு தலைவர் ரவிச்சந்திரன், நகராட்சி தலைவர் துரை மாணிக்கம், நகராட்சி ஆணையர் குமார் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள், லால்குடி மற்றும் அதன் சுற்றியுள்ள மணக்கால், கூகூர், சாத்தமங்கலம், ஆகிய கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 



 


மேலும்  இதில் பிரமாண்டமான பெரிய தேரில் சோமாஸ் கந்தர், அம்மன் எழுந்தருளினர். சிறிய தேரில் முருகன், விநாயகர், சப்தரிஷிகள் எழுந்தருள 5 தேர்கள் முன்னும், பின்னுமாக சென்றன. லால்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பெரிய தேருக்கு முன்னதாக சென்ற விநாயகர் சிறிய தேரையும் பக்தர்கள் இழுத்து சென்று கொண்டிருந்தனர். ஆயிரகணக்கான பக்தர்கள் மகிழ்ச்சியோடு சாமி தரிசனம் செய்து வந்தனர். மேலும் சிறுவர்கள், பெண்கள் என அனைவரும் உற்சாகமாக தேரை இழுத்து  சென்றபோது சென்றனர். குறிப்பாக மக்கள் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் எந்தவிதமான அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க 300க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில் பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றபோது எதிர்பராவிதமாக  லால்குடி பகுதியை சேர்ந்த தையல் தொழிலாளி கலியபெருமாள் (75) என்பவர் எதிர்பாராதவிதமாக தேரின் சக்கரத்தில் சிக்கினார். இதில், அவரது இரு கால்களும் நசுங்கியது.

 



 

இதனை தொடர்ந்து  பக்தர்கள் உடனே சிறிய தேரை நிறுத்தி கலியபெருமாளை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி கலியபெருமாள் உயிரிழந்தார். இதுகுறித்து லால்குடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தேர் சக்கரத்தில் சிக்கி கலியபெருமாள் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இறந்த தையல் தொழிலாளிக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.