தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் ஆர்.எஸ்.எஸ். சார்பில் 50 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை காரணம் காட்டி காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டிற்கும் ஊறுவிளைவிக்கக்கூடாது. பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தக்கூடாது. கம்பு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை எடுத்து செல்லக்கூடாது என்பது உள்பட பல்வேறு நிபந்தனைகளுடன் கோர்ட்டில் அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி திருச்சியில் நேற்று மாலை 4 மணி அளவில் மரக்கடை பகுதியில் இருந்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் தொடங்கியது. ஓய்வுபெற்ற அரசு மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மகாலெட்சுமி ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மரக்கடையில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம் மேலப்புலிவார்டுரோடு, தெப்பக்குளம், கல்லூரிச்சாலை, சத்திரம் பஸ் நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை வழியாக அங்குள்ள மைதானத்தை சென்றடைந்தது. அங்கு ஆர்.எஸ்.எஸ். பொதுக்கூட்டம் நடைபெற்றது.




மேலும் இந்த ஊர்வலத்தை முக்கிய பிரதான சாலையில் ஊர்வலம் நடைபெற்றதால் 3 மணிநேரம் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிப்பட்டனர். ஊர்வல பாதையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை. வீதிகள் அனைத்தும் தடுப்பு கட்டைகள் அமைத்து மூடப்பட்டன. கோவில், கிறிஸ்தவ ஆலயம், மசூதி, தலைவர்கள் சிலைகளுக்கு அருகே அதிரடி படை போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்தனர். முன்னதாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் வழிநெடுக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும் ஆங்காங்கே தீவிர சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக மேலப்புலிவார்டுரோடு, தெப்பக்குளம், கல்லூரிச்சாலை, சத்திரம் பஸ் நிலையம், சிந்தாமணி அண்ணாசிலை  ஆகிய பகுதிகளில் காலையில் இருந்தே காவல்துறையினர் அதிரடியாக பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் மோபநாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மேலும் காவல்துரையினர் சிசிடிவி கேமரா மூலம் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இதனால் நேற்று முழுவதும் அப்பகுதிகள் பரபரப்பாகவே காணப்பட்டது. 









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண