திருச்சி பொதுப்பணித்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனை - ரூ.31 லட்சம் பறிமுதல்
திருச்சியில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரூ.31 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அரசு, மற்றும் அரசு சார்ந்த அலுவலகங்களில் பொதுமக்களிடம் அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு லஞ்சஒழிப்பு துறை காவல்துறையினர் தெரிவித்து இருந்தனர். இதனை தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களில் மூன்று அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி ஹீபர் ரோட்டில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் கட்டளை மேட்டு வாய்க்கால் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் பெற்றதாக திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறைக்கு தொலைபேசி மூலமாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மதியம் 2.30 மணியளவில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல்துறை சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான அதிகாரிகள் அதிரடியாக பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை ஆற்றுப்பாதுகாப்பு உதவி செயற்பொறியாளர் அலுவலகத்துக்குள் அதிரடியாக சென்று சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியாளர் மணிமோகன் ஆகியோரது அலுவலக அறையில் கணக்கில் வராத ரூ.31 லட்சம் இருந்தது கண்டுபிடிக்கபட்டது.
Just In
மேலும் இதுபற்றி விசாரித்தபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். அந்த பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லை. அதனை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர், அங்கிருந்து பல்வேறு ஆவணங்களையும் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த ஊழியர்களிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணை தொடர்ந்து இரவு 7 மணி வரை நடந்தது. பின்னர் இருவரையும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து திருச்சி திருவானைக்காவல் கும்பகோணத்தான் சாலை பகுதியில் உள்ள கந்தசாமியின் வீட்டிலும், மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை ராஜா காலனி பகுதியில் உள்ள மணிமோகன் வீட்டிலும் சோதனை நடத்தினர். இதில் மணிமோகன் வீட்டில் ரூ.4 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சோதனையால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அரசு அலுவலகங்களில் இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது பொதுமக்கள்புகார் அளிக்கும்பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கபடும் என லஞ்ச ஒழிப்பு துறை அதிகரிகாள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்