தஞ்சாவூர்: திருச்சி மாவட்டத்தில் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்ற பகீர தகவல் வெளியாகி உள்ளது.
திருச்சியில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட கூடுதல் என்று அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த ஆகஸ்ட் 2025-ல் திருச்சி நகரில் சாலை விபத்துக்களில் உயிரிழந்தவர்களில், மற்ற வாகனங்கள் சம்பந்தப்படாத தனிநபர் விபத்துக்கள் தான் முதலிடத்தில் உள்ளன.
இந்த விபத்துக்கள், ஓட்டுநரின் சொந்த தவறால் ஏற்படுகின்றன. மற்ற வாகனங்கள் அல்லது நபர்கள் இதில் சம்பந்தப்படுவதில்லை. ஆகஸ்ட் மாதத்தில் நடந்த சாலை விபத்து மரணங்களில் சுமார் 40 சதவீதம் இந்த தனிநபர் விபத்துக்களே. இதில் பெரும்பாலானவை இருசக்கர வாகன ஓட்டுனர்களையே பாதித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல் துறை தெரிவித்த தகவல்படி, ஆகஸ்ட் 2025-ல் சாலை விபத்துக்களில் 13 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு இதே மாதத்தில் 19 பேர் உயிரிழந்தனர். ஆனால், உயிரிழப்பு இல்லாத விபத்துக்கள் உட்பட மொத்த விபத்துக்களின் எண்ணிக்கை 48-ல் இருந்து 55 ஆக அதிகரித்துள்ளது. காவல் துறை தரவுகளின்படி, 13 உயிரிழப்புகளில் ஐந்து விபத்துக்கள் 'தனிநபர் விபத்துக்கள்' என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இதில் ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளனர். அதிவேகமே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. நான்கு விபத்துக்கள் இருசக்கர வாகனங்களில் நடந்துள்ளன. கருமண்டபத்தில் ஒரு ஆட்டோ பாதுகாப்பு தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
பெரும்பாலான தனிநபர் விபத்துக்கள் நன்கு பராமரிக்கப்பட்ட சாலைகளிலேயே நடந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சாலைகள் அதிவேகமாக செல்ல ஓட்டுநர்களை ஊக்குவிக்கின்றன. பகல் நேரத்தில் இதுபோன்ற ஒரு விபத்து கூட நடக்கவில்லை. பாரதிதாசன் சாலை, திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை, திருச்சி-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை போன்ற முக்கிய சாலைகளில் தனிநபர் விபத்துக்கள் பதிவாகியுள்ளன. திருவளர்ச்சோலை மற்றும் கல்கண்டார்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள உட்புற சாலைகளில் மேலும் இரண்டு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
ஒரு சம்பவத்தில், 73 வயது முதியவர் ஒருவர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆட்டோ மீது மோதி உயிரிழந்தார். இரவு நேரங்களில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களை பிடிக்கும் சோதனைகளை தீவிரப்படுத்த வேண்டும். சாலைகள் காலியாக இருப்பதால், ஓட்டுநர்கள் அதிகாலை நேரங்களில் வேகமாக ஓட்டுகிறார்கள். சில விபத்துக்களுக்கு தெரு நாய்களும் காரணமாக இருக்கலாம் என்று சமூக நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.