திருச்சி மாவட்டத்தில் மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப்போட்டத்தால் இன்று ஒருநாள் மட்டும் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவித்தது. இதை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் அடைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசி ஆலை உரிமையாளர்கள் கூறும் போது.. ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 சதவீத வரி விதிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை பதிவு பெற்ற பிராண்டுக்கு மட்டுமே 5 சதவீத வரி விதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பண்டல் செய்யப்பட்ட அனைத்து விதமான அரிசி மூடைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்பட்டால் கிலோ அரிசி ரூ.3 வரை உயரும். இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள் என்றனர். குறிப்பாக நடுத்தர குடும்பம் மட்டுமில்லாமல் தினமும் வேலைக்கு செல்லும் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். கடந்த முறை ஜி.எஸ்.டி. வரி விதித்தபோது தமிழக அரசிடம் எடுத்துக்கூறியதால் நிறுத்தப்பட்டது. மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அரிசி ஆலை சம்மேளனம், அகில இந்திய அனைத்து உணவு தானியங்களின் அமைப்புகள் இணைந்து இன்று அனைத்து அரிசி ஆலைகள், அரிசி மொத்த வணிகர்கள், அரிசி சில்லறை வணிகர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் ஒருநாள் அடையாள கடையடைப்பு மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 160 அரிசி ஆலைகளும், 150 வணிகர்கள், 1500 கடைகளும் இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருச்சியில் இன்று ஒருநாள் 1500 டன் அரிசி உற்பத்தி பாதிப்பு மூலம் 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் தமிழகம் முழுவதும் 2500 அரிசி ஆலைகளும் 15 ஆயிரம் மேற்பட்ட வணிகர்,30 ஆயிரம் சில்லரை வணிக கடைகளும் ஒருநாள் அடையாள கடையடைப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். திருச்சியில் 60 கோடி ரூபாய் பாதிப்பு என்ற அளவில் தமிழகம் முழுவதும் 16 மடங்கு அரிசி உற்பத்தி பாதிக்கபட்டுள்ளதாக தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர் சங்க மாநில செயலாளர் சிவானந்தன் தகவல் தெரிவித்தார். மேலும் மத்திய அரசு இந்த வரி உயர்வை திரும்பபெறவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்