காவரி ஆற்றில் இருந்து கடந்த ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்துவிடப்பட்டதையொட்டி திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி தீவிரமாக நடந்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் விவசாயிகள் தங்களுக்கு தேவையான உரங்களை பல்வேறு கடைகளில் பெற்று செல்கிறார்கள். இது போன்று விற்பனையாளர்களிடம் இருந்து உரத்தை பெற்று சென்ற விவசாயிகள் தரமற்றதாக உள்ளது என தொடர்ந்து புகார் தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கு தரமான உரம் சென்று அடைகிறதா என தொடர்ந்து அரசின் சார்பில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக விவசாயிகளுக்கு தரமற்ற உரங்களை விற்பனை செய்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு எச்சரிக்கை விடுத்துள்ளார். திருச்சியில் உரம் கட்டுப்பாட்டு ஆய்வகம் கடந்த 1976ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இந்த ஆய்வகத்தில் ரசாயன உர மாதிரிகள் ஆய்வு செய்யபட்டு வருகிறது. விவசாய பயன்பாட்டுக்கென்று நேரடி உரம் கூட்டுரம், கலப்புரம், போன்ற மரபான ரசாயன உரங்கள் தவிர்த்து இப்போது பயன்பாட்டில் உள்ள நூறு சதவீதம் நீரில் கரையும் உரம், நுண்ணூட்டங்களுடன் செறிவூட்டப்பட்ட கூட்டுரம் போன்றவையும் பயன்பாட்டில் உள்ளன. இவை சொட்டு நீர்பாசனம், நுண்ணிய பண்ணையம், உயர் தொழில்நுட்ப வேளாண்மை போன்றவற்றில் பெரும் அளவில் பயண்படுத்தபட்டு வருகிறது.
இந்த அனைத்து வகையான ரசாயன உரங்கள், நேரடி நுண்ணூட்டங்கள், நுண்ணூட்ட கலவைகள், போன்ற உரங்களும் உர கட்டுப்பாடு ஆய்வகத்தில் ஆய்வு செய்யப்படுகின்றன. உர ஆய்வாளர்களால், உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு என பெறப்படுகின்றன. பெறப்பட்ட மாதிரிகள் அனைத்தும் உர கட்டுப்பாட்டு ஆணை 1985 குறிப்பிட்டபடி பல்வேறு தர சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வின் முடிவுகள் தரமானவை அல்லது தரமற்றவை என்று முறையாக அறிவிக்கப்படுகின்றன. தரமற்ற மாதிரிகளை விற்பனை செய்த விற்பனை நிலையங்கள், மீதும் விற்பனையாளர்கள் மீதும் உர ஆய்வாளர்களால் சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்த ஆய்வகம் மூலம் தரமான ரசாயன உரங்கள் விவசாயிகளை சென்று அடைவது உறுதி செய்யப்படுகிறது, என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது நிலங்களுக்கு தேவையான உரங்களை வாங்கும்போது தரமாக உள்ளதா என்பதை நன்கு கண்டறிந்து வாங்க வேண்டும். மற்றவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு தேவையற்ற உரங்களை பயன்படுத்தினால் விவசாய நிலம் பெரிய அளவில் பாதிக்கப்படும். குறிப்பாக தரமற்ற உரங்களை விற்பனை செய்யக்கூடிய நிலையங்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது புகார் தெரிவிக்கலாம். புகார்கள் உறுதி செய்யப்படும் பட்சத்தில் விற்பனை நிலையங்கள் மீதும், விற்பனையாளர்கள் மீதும் ,உர ஆய்வாளர்களால் சட்டபூர்வ நடவடிக்கைகளை எடுக்கப்படும். மேலும் அரசு அங்கீகாரம் பெற்று தரமான உரம் என்று சான்றிதழ் வழங்கப்பட்ட உரங்களை மட்டுமே விவசாயிகள் வாங்கி பயன்பெற வேண்டும், என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.