அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் புகழ்பெற்ற சோழப்பேரரசின் இரண்டாவது தலைநகரமான கங்கைகொண்டசோழபுரம் அமைந்துள்ளது. முதலாம் இராசராசனின் மகனும் அவரைத் தொடர்ந்து ஆட்சி செய்தவருமான முதலாம் இராசேந்திரனால் சோழநாட்டின் தலைநகராக இந்நகரம் தோற்றுவிக்கப்பட்டது. கங்கைகொண்டசோழபுரம் தலைநகராக உருவாக்கப்பட்டதையும் சோழப்பேரரசர்களின் அரசியல் தளமாக மாற்றப்பட்டதையும் கல்வெட்டுகளும் செப்பேடுகளும் உறுதிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரத்தை உருவாக்கிய முதலாம் இராசேந்திரனின் ஆட்சியின் போது, முடிகொண்டசோழன் திருமாளிகை, கங்கை கொண்ட சோழன் மாளிகை, சோழகேரளன் திருமாளிகை என்ற பெயர்களில் இங்கு பெரிய அரண்மனைகள் கட்டப்பட்டிருந்ததாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம், மாளிகைமேடு பகுதிகளில் அகழாய்வுப் பணிகளைக் முதலமைச்சர் கடந்த 11.2.2022 அன்று தொடங்கி வைத்தார். சோழப் பேரரசின் மாமன்னன் முதலாம் இராசேந்திரனின் தலைநகரான கங்கை கொண்ட சோழபுரத்தின் நகரமைப்பு மற்றும் மண்ணில் புதைந்துள்ள கட்டுமானங்களை வெளிக்கொணர்ந்து அரண்மனையின் வடிவமைப்பினை தெரிந்து கொள்வது இந்த அகழாய்வின் நோக்கமாகும். கல்வெட்டுகள் மற்றும் செப்பேடுகளின் சான்றுகளின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கங்கை கொண்ட சோழபுரத்திலுள்ள மாளிகைமேட்டில் அகழாய்வு மேற்கொண்டது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய அகழாய்வுப் பணிகள் செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, புதையுண்ட செங்கல் கட்டுமானங்கள் இருந்ததற்கான சான்றுகள் வெளிக் கொணரப்பட்டுள்ளன. கிடைக்கப்பட்ட சான்றுகளின் மூலம் கட்டடப்பகுதிகள் செங்கற்களின் அடிப்பகுதியில் எழுப்பப்பட்டுள்ளது தெரிய வருகிறது. மேலும், கிடைக்கப்பெற்ற செங்கற்கள் மற்றும் கூரை ஓடுகள் வெவ்வேறு அளவுகளில் காணப்படுகின்றன. செங்கல் கட்டுமானங்களுடன் பல்வேறு வகையான பானையோடுகள் மற்றும் தொல்பொருட்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. உலோகப் பொருட்கள் குறிப்பாக அதிக அளவில் இரும்பு ஆணிகள், செம்பினாலான பொருட்கள், செப்புக் காசுகள், தங்கக் காப்பு, கண்ணாடி மணிகள் மற்றும் வளையல் துண்டுகள், தந்தத்தினாலான பொருட்கள், வட்டச்சில்லுகள் மற்றும் அலங்கரிக்கப்பட்ட சுடுமண் கெண்டி மூக்குகள் ஆகியவை கண்டெடுக்கபட்டுள்ளன.செலடன் மற்றும் போர்சலைன் எனப்படும் சீனப் பானையோடுகளும் அதிக அளவில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இடைக்காலத்தின் தொடக்கத்தில் காணப்படுகின்றன. இவை 11 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளில் தமிழகம் சீனாவுடன் கொண்டிருந்த வணிகத்தொடர்பை வெளிப்படுத்துகின்றன. கங்கைகொண்டசோழபுரம் (மாளிகைமேடு) அகழாய்வுப் பணிகள் 2021 மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டன. மொத்தமாக, 5 அகழாய்வுக் குழிகளைக் கொண்ட 19 காற்பகுதிக் குழிகள் தோண்டப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் மொத்தம் 1010 தொல்பொருட்கள் கிடைத்துள்ளது.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கங்கை கொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அந்த பணிகள் குறித்து அதிகாரிகள் முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அகழ்வாய்வின் போது கிடைத்த பொருட்களையும் முதலமைச்சர் பார்வையிட்டார். மேலும் இந்த பொருட்கள் அனைத்து பாதுகாகபட வேண்டியது என தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.ஆ.ராசா, தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.