தமிழ்நாட்டில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி திருக்கோயில் வசம் கொண்டு வந்து திருக்கோயில் வருவாயை அதிகப்படுத்த வட்டாட்சியர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு கேட்டு கொண்டு உள்ளார். மேலும்  திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து தொடர்ந்து  மீட்கப்பட்டு வருகிறது என்றார். இதுவரை திருக்கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த 456 நபர்களிடம் இருந்து திருக்கோயிலுக்குச் சொந்தமான நிலம் 432.82 ஏக்கரும், 485.1698 கிரவுண்ட் மனைகளும், 20.69 கிரவுண்ட் கட்டடமும், 15.597 கிரவுண்ட் திருக்குளமும் திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டுள்ளது.


இதுவரை மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய மதிப்பு தொகை 1628.61 கோடி ஆகும். திருக்கோயிலுக்கு  சொந்தமான இடங்களில் தனியார் நபர்கள் மனைகளை கட்டியிருந்தால் அதை திருக்கோயிலுக்கு வாடகைதாரர்களாக மாற்றவும், காலி மனைகளை உடனடியாக திருக்கோயில் வசம் கொண்டு வரவும் பணிபுரிய வேண்டும் என்றார். திருக்கோயில் நிலங்களில் நிலப்பட்டா, பெயர் மாற்றம் செய்ய வேண்டிய இடங்களை கண்டறிந்து திருக்கோயிலுக்கு பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.




மேலும் திருக்கோயிலின் எல்லைக்குட்பட்ட நிலங்கள், மனைகள், கடைகள், வீடுகள் தொடர்பான விவரங்களை புத்தக வடிவிலும், மென்பொருள் வடிவிலும் தயார் செய்து வைக்க வேண்டும். தற்போது திருக்கோயில் நிலங்கள் நவீன உயர் தொழில்நுட்பத்தில் அளவீடு செய்யப்பட்டு COLLABLAND மென்பொருள் பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து  அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகில் கண்டிராதித்தம் கருப்புசாமி அய்யனார் கோயிலில் தனியார் ஆக்கிரமிப்பு செய்து வந்ந திருமண மண்டபத்தை அரசு இந்து சமய அறநிலைத்துறை தன்வசம் கையகப்படுத்தியது.


மேலும் அனுமதியில்லாமல் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கோயிலின் உள்ளே இருந்த மண்டபம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப் பட்ட வழக்கின்படி 25.2.2022 அன்றைய உத்தரவின்படி தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து கோயில் தமிழக அரசின் அறநிலைதுறை வசம் சுவாதீனம் பெறப்பட்டது. எனவே இந்த மண்டபத்தில் அத்துமீறி நுழைபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இம்மண்டபத்தில் சுபநிகழ்ச்சிகள் நடத்திக்கொள்ளும் வகையில் அனுமதி பெற திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் நிர்வாகத்தை அணுகி  சுப நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. 





 

இதனை தொடர்ந்து இந்த கோயிலில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து இருந்த மண்டபத்தை தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கையகப்படுத்தும் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் நாகராஜன் முன்னிலையில், திருமழபாடி வைத்தியநாத சுவாமி கோயில் செயல் அலுவலர் மணிவேல் தலைமையில், கண்டராதித்தம் வருவாய் அலுவலர் மேகலா, ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ராமமூர்த்தி ஆகியோர் கையகப்படுத்தினர்.  மேலும் நிகழ்வின் போது பாதுகாப்பு பணியில் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜன், காவல் ஆய்வாளர் சகாய அன்பரசு, உதவி ஆய்வாளர் செந்தில்நாதன் ஆகியோர் ஈடுபட்டனர்.