சீனாவில் `பி.எப்.7' என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இதுபோல அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த தொற்று பரவி வருவதால், உலக சுகாதார நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அறிவுறுத்தி உள்ளது. இதனால் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்கி சுற்றறிக்கை வழங்கி உள்ளது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சைக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவே 125 படுக்கை வசதிகளுடன் கூடிய கொரோனா சிறப்பு வார்டு தயார் செய்யப்பட்டது. அந்த வார்டுக்கான டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். 




இந்தநிலையில் அரசு மருத்துவமனையில்  கொரோனா வார்டில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு வந்தால் எவ்வாறு செயல்படவேண்டும் என்று மருத்துவமனை ஊழியர்களுக்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று காலை நடைபெற்றது. டீன் நேரு முன்னிலையில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் அருண்ராஜ் தலைமையிலான மருத்துவ குழுவினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நிகழ்த்தினர். அப்போது, நோய் தொற்று பாதிக்கப்பட்ட நோயாளி ஆம்புலன்ஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டதும், அவருக்கு இதயதுடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து உடனடியாக அவருக்கு ஆக்சிஜன் வாயு அளிப்பது மற்றும் அவரின் உடல்நிலை சீராக உள்ளதா? என்று கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை ஒத்திகை செய்தனர். ஒத்திகையின் போது, நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் குழுவினர் பி.பி.கிட் எனப்படும் கவச உடை அணிந்திருந்தனர்.




இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனை டீன் நேரு கூறுகையில், “தற்போது பரவி வரும் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான அனைத்து வசதிகளும் திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் உள்ளது. 50 ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளும், 50 சாதாரண படுக்கைகளும், 25 தீவிர சிகிச்சை பிரிவு படுக்கைகளும் என்று மொத்தம் 125 படுக்கை வசதிகளுடன் கொரோனா வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை கண்காணித்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், செவிலியர்கள் என்று 250 பேர் தயார் நிலையில் உள்ளனர். அத்துடன் 350 ஆக்சிஜன் செறிவூட்டிகளும் தயார் நிலையில் உள்ளன. 3 ஆக்சிஜன் உற்பத்தி மையமும் செயல்பாட்டில் உள்ளது. இதுதவிர நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் போதுமான அளவு தற்போது தயார் நிலையில் உள்ளது. மேலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாள் ஒன்றுக்கு சுமார் 250 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.