சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டு கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை நோக்கி வந்து கொண்டிருந்தது. பேருந்தை அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரம் தொத்தை என்ற கிராமத்தை சேர்ந்த சந்திரமோகன் (வயது 39) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்தநிலையில் அந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் அருகே கள்ளிக்குடி மார்க்கெட் எதிரே வந்தது. அப்பகுதியில் புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் அந்த வழியாக செல்லக்கூடிய அனைத்து வாகனங்களும் இடதுபுறம் உள்ள சர்வீஸ் சாலையில் திரும்பி செல்வதற்காக இரும்பு தடுப்பு வைத்துள்ளனர். அதிகாலை நேரத்தில் வேகமாக வந்த ஆம்னி பேருந்து டிரைவர் இரும்பு தடுப்பு உள்ளதை கவனிக்காமல் திடீரென பிரேக் பிடித்துள்ளார். இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் கவிழ்ந்தது.
இதனை தொடர்ந்து பேருந்தில் இருந்த பயணிகள் படுகாயம் அடைந்து கூச்சல் போட்டனர். இது குறித்து தகவல் அறிந்த மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையிலான போலீசார், நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த பிரேம்குமார் (36), அவரது மனைவி சவுமியா (30), மகன் இமாக்ஸ் (8), சென்னையை சேர்ந்த ஜீவா (61), காஞ்சனா தேவி (36) உள்பட 24 பேர் காயமடைந்தனர். இதில் பலத்த காயமடைந்த 5 பேரை திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், மற்ற 19 பேரை திருச்சி அரசு மருத்துவமனைக்கும் சிகிச்சைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். மற்ற பயணிகள் மாற்று பேருந்து மூலம் அவரவர் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 மாதங்களில் 3 விபத்துகள் நடந்துள்ளது. எனவே அப்பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்