தஞ்சாவூர்: திருச்சிக்கு விமானத்தில் பயணி ஒருவரால் கடத்தி வரப்பட்ட அமேசான் காடுகளில் காணப்படும் அரியவகை அணில் குரங்கை அதிகாரிகள்  பறிமுதல் செய்தனர். இச்சம்பவம் திருச்சி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Continues below advertisement

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட அணில் குரங்கை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், கத்தார், தோஹா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு தினசரி விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து, சென்னை, மும்பை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு உள்நாட்டு விமான சேவைகளும் இயக்கப்பட்டு வருகின்றன.திருச்சி விமான நிலையத்தில் குறுகிய ஓடுதளத்தின் காரணமாக மிகப்பெரிய விமானங்கள் தரையிரங்குவதில் சிக்கல்கள் உள்ளது. இருந்த போதிலும் அதிக பயணிகளின் எண்ணிக்கை காரணமாக தெற்கு ஆசியாவிலேயே 6-வது இடத்தை திருச்சி விமான நிலையம் பிடித்துள்ளது. இங்கு வரும் பயணிகளில் அதிகமானோர், தொழில்களுக்காகவும், வேலைகளுக்காகவும், டூரிசம், புலம் பெயர் தொழிலாளர்கள் என இருக்கிறார்கள். இதனால் திருச்சி விமான நிலையம் எப்போதும் பிஸியாகவே இருக்கும்.

Continues below advertisement

அவ்வாறு சர்வதேச நாடுகளில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் வரும் பயணிகள், தங்கம், வெளிநாட்டு பணம், அரிய வகை விலங்குகள், பறவைகள், போதைப்பொருட்கள் உள்ளிட்டவைகளை கடத்தி வருவதும், அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த கடத்தலை தடுப்பதற்கு சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. இந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ஒரு பயணியின் உடைமையில், உயிருடன் உள்ள ஒரு அணில் குரங்கு (squirrel Monkey) கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

இது குறித்து சுங்கத்துறை அதிகாரிகள் வனத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர், அணில் குரங்கை கைப்பற்றி கொண்டு சென்றனர். தொடர்ந்து, குரங்கை கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயணியிடம் அரிய வகை அணில் குரங்கு பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அணில்குரங்கு இங்கு கடத்தி வரப்படுவதற்கு என்ன காரணம் என்றும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் இந்த அணில் குரங்கை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து வனத் துறையினர் தரப்பில் கூறுகையில், அதிகபட்சம் ஒன்றரை கிலோ எடை, ஒரு அடி முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும் இவ்வகை குரங்குகள், செல்லப்பிராணிகளாக வளர்க்கப்படுகின்றன. ஆனால், இந்திய வன உயிரியல் சட்டத்தின்படி, மற்ற நாடுகளின் உயிரினங்களை இந்தியா கொண்டு வருவது குற்றம். ஏனெனில், இந்திய சுற்றுச்சூழலுக்கு தொடர்பில்லாத உயிரினங்கள், இந்தியாவின் அடிப்படை தகவமைப்பை மாற்றக்கூடியவை. எனவே, அந்தக் குரங்கை மீண்டும் மலேசியாவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற அரிய வகை அணில் குரங்குகள், மருத்துவ பரிசோதனைக்காகவும், செல்ல பிராணிகளாக வளர்ப்பதற்கும், இறைச்சிக்காகவும் கடத்தப்படுகின்றன என்றனர்.