வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் மண்பாண்ட பொருட்கள் அழிந்து கொண்டே செல்கின்றன என்று சொல்லலாம். அந்த வகையில் மண்பாண்ட பொருட்களை காண்பதே அரிதாக உள்ளது. ஆனால் இன்றும் கூட சிலர் மண்பாண்ட பொருட்களை உபயோகிப்பவர்களும் உள்ளனர். இந்நிலையில் திருச்சியில் வயலூர் சாலையோரம் உள்ள மண்பாண்ட பொருட்கள் விற்பனையகத்தில் ஒரு ரூபாயில் இருந்து தொடங்கி 1000 ரூபாய் 3000 ரூபாய் வரையிலான அனைத்து வகையான புதுவிதமான மண்பாண்ட பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றை பற்றி இங்கே பார்க்கலாம்.
திருச்சி வயலூர் சாலை சோமரசன்பேட்டை பகுதியில் அமைந்துள்ளது இந்த சந்தானலட்சுமி மண்பாண்ட கடை ஆகும். இந்த மண்பாண்ட பொருட்கள் என்றாலே பொதுவாக விளக்கு, பானை மண் சட்டி, என்று தான் பார்த்துள்ளோம். ஆனால் அவற்றை மிஞ்சிய வித்தியாசமான பொருட்கள் இந்த விற்பனையகத்தில் கிடைக்கின்றன. அதிலும் குறிப்பாக சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் இருந்து, வீட்டு அழகு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று பலவகையான பொருட்கள் பார்ப்பதற்கே கண்களுக்கு குளிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது.
மேலும் ஒரு ரூபாய்க்கு அகல்விளக்கு என்று தொடங்கி, பெரிய விளக்குகள் மற்றும் வீட்டில் அழகுக்காக தொங்கவிடப்படும் மணிகள் போன்ற பலவிதமான பொருட்கள் இங்கு கிடைக்கின்றன. அதுமட்டுமின்றி இங்கு விற்கப்படும் சற்றே வித்தியாசமான 'மேஜிக் விளக்கு' என்று அழைக்கப்படும் விளக்கு அடிப்பகுதியில் எண்ணெய் ஊற்றி அதை நேராக திருப்பும்போது அந்த எண்ணெய் ஆனது ஒரு சொட்டு கூட கீழே கசியாமல் விளக்கின் மேல் பகுதிக்கு வந்து விடுகின்றது. இது பார்ப்பதற்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. பின்னர் இங்கே விற்கப்படும் மண்ணில் செய்த குருவிபொம்மை விசில் போன்ற அமைப்புடன் வருகின்றது. அதை சாதாரணமாக ஊதினால் விசில் போன்ற சத்தமும், அதை நீரில் மூழ்க வைத்து எடுத்து ஊதினால் குருவி கத்துவது போன்ற சத்தமும் எழுப்புகிறது. இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருக்கும்.
மேலும் குழந்தைகள் விளையாடும் அழகு அழகான செப்பு சாமான்களும் இங்கு கிடைக்கின்றன. இது தவிர இங்கு சமைக்க உதவும் பொருட்களான வாணலிகள் பல்வேறு அளவுகளில் கிடைக்கிறது. மேலும் துளசி மாடம், மண்சட்டி, மண்பானை போன்ற பொருட்களும் பல்வேறு அளவுகளிலும் அளவுக்கு ஏற்ற விலைகளிலும் கிடைக்கிறது. தண்ணீர் குடிக்க உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்கள் கூட மண்ணில் தயாரித்து இங்கே விற்பனை செய்கின்றனர். இதன் மூடி பிளாஸ்டிக் பொருளிலும், தண்ணீர் பாட்டில் மண்ணிலும் செய்யப்பட்டிருப்பது மிகவும் வித்தியாசமாகவும் பார்ப்பதற்கு அழகாகவும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நீர் ஊற்றி வைக்க உதவும் ஜாடிகள் கூட இங்கு செய்து விற்கின்றனர்.
குறிப்பாக அழகுக்காக விற்கப்படும் புத்தர் சிலை மற்றும் குபேர பானை போன்றவையும் பல்வேறு அளவுகளிலும் வண்ணங்களிலும் இங்கு விற்பனை செய்யப்படுகின்றன. மேலும் யானை பொம்மை, குதிரை பொம்மை போன்ற மண் பொம்மைகள் 600 ரூபாயிலிருந்து ஆரம்பமாகின்றன. நீர் ஊற்றி வைக்கப்படும் பெரிய அளவிலான நீர் ஜாடிகள் குழாயுடன் வருகிறது. அவையும் பல்வேறு அளவுகளிலும் பல்வேறு வண்ணங்களிலும் கிடைக்கின்றன. அனைத்துமே நமது பட்ஜெட்டிற்கு ஏற்றார் போன்ற விலையிலேயே கிடைக்கின்றன.
இங்கு இந்த மண்பாண்ட பொருட்கள் செய்து விற்கும் விற்பனையாளர்கள் மண்பாண்ட பொருட்களை வெளியூர்களுக்கு அல்லது வேறு மாநிலங்களுக்கு பார்சல் செய்து கொடுக்கின்றனர். இதன் காரணமாக எங்கிருந்து வேண்டுமானாலும், யார் வேண்டுமானாலும் ஆர்டர் செய்து இந்த மண் பாண்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். இந்த நாகரீக கால கட்டத்தில் மண்பாண்ட பொருட்கள் பார்ப்பதே அரிது, என்ற சூழ்நிலையில், இதுபோன்ற, சிறுசிறு முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை கூட மண்ணில் செய்து விற்பனை செய்து வரும் சாதனை பெண் ரம்யா.