தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந்தேதி மர்ம நபர்களால் கடத்தி சென்று படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு குறித்து மாநகர போலீசார், சி.பி.சி.ஐ.டி., சி.பி.ஐ. என பல்வேறு தரப்பு விசாரணை நடத்தப்பட்டது. அதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால் தற்போது கோர்ட்டு உத்தரவின்பேரில், சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் தமிழகத்தில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல்லை சேர்ந்த மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ்குமார், திருச்சியை சேர்ந்த சாமி ரவி உள்பட 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதில் குடவாசலை சேர்ந்த தென்கோவன் தவிர, மற்றவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை குறித்த அறிக்கை சிறப்பு புலனாய்வுக்குழு வசம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினார்கள். ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதையடுத்து உண்மை கண்டறியும் சோதனையில் பங்கேற்ற அனைவரிடமும் மீண்டும் விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வுக்குழு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.




இந்தநிலையில் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த பா.ம.க. பிரமுகரான பிரபு என்ற ஆம்புலன்ஸ் பிரபுவிடம் (வயது 45) கடந்த 2 நாட்களுக்கு முன்பு சிறப்பு புலனாய்வுக்குழுவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். ராமஜெயத்தை அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் கடத்தி சென்ற கார் குறிப்பிட்ட மாடல் வகையை சேர்ந்தது என சிறப்பு புலனாய்வுக்குழுவினர் ஏற்கனவே விசாரணையில் கண்டறிந்து இருந்தனர். இந்தநிலையில் அதே மாதிரியான காரை பா.ம.க. பிரமுகரான பிரபு பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரை சந்தேக வளையத்துக்குள் கொண்டு வந்து விசாரித்தனர். இந்த விசாரணையில் குறிப்பிடும்படி எந்த தகவலும் கிடைக்கவில்லை எனவும், தொடர்ந்து விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர். ராமஜெயம் கொலை வழக்கில் பா.ம.க. பிரமுகரிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரணை நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் சிறப்பு புலனாய்க்குழுவினர் விசாரணை நடத்திய பா.ம.க. பிரமுகரான பிரபுவுக்கும், திருச்சி உய்யகொண்டான் திருமலை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணனுக்கும்(49) முன்விரோதம் இருந்து வந்தது. ராமகிருஷ்ணன் 4 சக்கர வாகன பழுது பார்க்கும் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்று காலை ராமகிருஷ்ணன் சாமி கும்பிட புத்தூர் நால்ரோட்டில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலுக்கு வந்தார். அப்போது, அங்கு வந்த பிரபு கத்தியை காட்டி மிரட்டி, அவரிடம் இருந்து ரூ.3,800-ஐ பறித்துச்சென்றார். இதுகுறித்த புகாரின்பேரில் பிரபுவை அரசு ஆஸ்பத்திரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.