சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’(Jailer). இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சரவணன், யோகிபாபு, தமன்னா, சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராஃப், விநாயகம், வசந்த் ரவி, மிர்னா என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள ஜெயிலர் படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று வெளியாகியுள்ளது. 




படத்தின் கதை 


நேர்மையாக இருக்கும் தனது போலீஸ் மகனுக்கு எதிரியால் ஆபத்து நேர்ந்தால், மீதம் இருக்கும் குடும்பத்தை காக்க, அப்பா என்ன செய்கிறார் என்பதே ஜெயிலர் படத்தின் ஒன்லைன் ஸ்டோரியாகும். 


சிலை கடத்தல் மன்னனாக விநாயகன் குழு செயல்படுகிறது. அந்த கடத்திய சிலை அடங்கிய கண்டெய்னர் லாரி போலீஸ் அதிகாரி வசந்த் ரவியால் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்தப் பிரச்னையில் அவர் காணாமல் போகிறார். வசந்த் ரவி கொலை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. மகனை நேர்மையாக வளர்த்ததால் தான் வசந்த் ரவி இறந்ததாக குற்ற உணர்ச்சியில் பழிவாங்க ரஜினி புறப்படுகிறார். இதனால் குடும்பத்தினரை கொல்லும் முயற்சியில் வில்லன் கூட்டம் இறங்க , இந்த போராட்டத்தில் ரிட்டையர்ட் போலீஸ் ரஜினி எடுக்கும் அதிரடி ஆக்ஷன்களும், டிவிஸ்ட்களும் என இரண்டரை மணி நேரம் படமாக காட்சிப்படுத்தியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.




இந்நிலையில் திருச்சி  மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள சோனா மீனா திரையரங்கத்தில் திருச்சி மாவட்ட தலைமை ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் சார்பாக பட்டாசுகள் வெடித்து வெகு விமர்சையாக கொண்டாடினர். அதேபோன்று மேளதாளங்கள் முழங்க நடனம் ஆடி ரஜினிகாந்த் பேனருக்கு பால் அபிஷேகம் செய்து தங்களுடைய மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். இதனால் திரையரங்கம் முழுவதும் விழா கோலம் கண்டது. மேலும் படம் முடிந்து வந்த ரசிகர்களிடம் கேட்டபோது.. தலைவர் மாஸ் நடிப்பு, கதை அருமையாக உள்ளது, அனைவரும் குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டிய படம் என்றனர். தமிழ்நாட்டில் இன்றும், என்றும் ஒரே சூப்பர் ஸ்டார் தான், அதுவும் ரஜினி மட்டும் தான் என கூறினர். பின்பு இயக்குனர் நெல்சன் நடிகர் விஜய் அவர்களை வைத்து சொதப்பி இருந்தார், அந்த பயத்தில் ரஜினி படம் எப்படி இருக்குமோ என ஒரு அச்சத்துடன் வந்து பார்த்தோம். ஆனால் ஜெயிலர் படம் மாஸ் காட்டியுள்ளது, இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர். குறிப்பாக வசனம், கதை, பாடல், நடனம், இசை என அனைத்து அருமையாக அமைந்துள்ளது. மக்கள் அனைவரும் தங்களது குடும்பங்களுடன் வந்து பார்க்க வேண்டிய படமாக உருவாகியுள்ளது.