தஞ்சாவூர்: மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யணும் என்று ரயில்வே துறை வளர்ச்சி திட்டப்பணிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தென்னக ரயில்வே, திருச்சி ரயில்வே கோட்டம் சார்பில் தென்னக ரயில்வே பொதுமேலாளர் சிங் தலைமையில் எம்பிகள் பங்கேற்ற கூட்டம் திருச்சியில் நடந்தது. இதில் திருச்சி ரயில்வே கோட்டத்திற்கு கீழ் உள்ள தொகுதிகளில் நடந்து வரும், நடந்து முடிந்த ரயில்வேதுறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மக்களவை எம்பிக்கள் கல்யாணசுந்தரம், சண்முகம், எம்பிக்கள் திருச்சி துரைவைகோ, தஞ்சாவூர் முரசொலி, பெரம்பலூர் அருண் நேரு, மயிலாடுதுறை சுதா, கடலூர் விஷ்ணு பிரசாத், திருவண்ணாமலை அண்ணாதுரை, நாகை செல்வராஜ், விழுப்புரம் ரவிகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தென்னக ரயில்வே பொது மேலாளர் சிங் எம்பிக்களிடம் தென்னக ரயில்வேவின் செயல்பாடு குறித்தும், தென்னக ரயில்வேயின் சமீபத்திய சாதனைகள், பயணிகள் வசதிகளை மேம்படுத்த மேற்கொண்ட நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விளக்கி பேசினார். திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் மற்றும் தென்னக ரயில்வே முதன்மை தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எம்பிக்கள் சார்பில் புதிய ரயில் சேவை வழங்குவது, கூடுதல் ரயில் நிறுத்தங்கள், தற்போது நடந்து வரும் ரயில்வே பாதை அமைக்கும் பணிகள், தற்போது உள்ள ரயில் சேவைகளை விரிவாக்கம் செய்வது, ரயில்நிலைய மேம்பாடு, ரயில்வே மேம்பாலங்கள், சுரங்கப்பாதை அமைப்பது, ரயில்வே திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துதல் பணி போன்ற திருச்சி கோட்டத்தில் ரயில்வே துறையை மேம்படுத்த தேவையான பல்வேறு கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தினர்.
மேலும் நடந்து வரும் திட்டங்கள், நடைமேடை உயர்த்தும் பணி பாலக்கரை, தொண்டாம்பட்டி, மஞ்சத்திடல், ஆகிய ரயில் நிலையங்களில் நடந்து வருகிறது. நடைமேடை கூடாரம் திருச்சி ஜங்சனில் அமைக்கப்பட்டு வருகிறது, புதிய பாலம் பிச்சாண்டார் கோயில், திருச்சி கோட்டை மற்றும் திருச்சி டவுன் ஸ்டேஷனில் நடந்து வருகிறது, மின் படிபட்டுகள் திருச்சி ஜங்சனில் அமைக்கப்பட்டு வருகிறது, ஸ்ரீரங்கத்தில் லிப்ட் அமைக்கும் பணி நடைபெற உள்ளது, திருச்சி ஜங்ஷன் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது, திருச்சி கோட்டத்தின் கீழ் உள்ள லால்குடி, ஸ்ரீரங்கம், கோட்டை, திருவெறும்பூர், மஞ்சத்திடல், பொன்மலை, திருச்சி டவுன், பாலக்கரை ஆகிய நிலையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடந்து வருகிறது என்பது குறித்து விளக்கி கூறப்பட்டது. அப்போது மக்களின் தேவைகளை அதிகாரிகள் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.